சமூக விரோத கருத்துக்களை பகிரும் இடமாக சமூக வலைதளங்களை சிலர் பயன்படுத்தி வருகின்றனர். போலியான விஷமத்தனமான கருத்துக்கள் அதிகமாக பகிரப்பட்டு சாமானிய மக்களை சென்றடைகின்றன. அவசரத்தில் பலர் இந்த கருத்துக்களை உண்மை என நம்பக்கூடும் .
அப்படியான ட்வீட் பதிவு ஒன்று தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கண்ணில் பட கொதித்தெழுந்துவிட்டார்.
ட்விட்டைல் ‘ராதா இல்லா படம் சாதா’ என்ற ஐடியில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை குறிப்பிடும் விதமாக, ‘அவர் 2022-23 பட்ஜெட்டில் இந்து கோவில்களை இடித்து அதில் மசூதிகள், தேவாலயங்கள் கட்ட 12500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்’ என்று ஒரு பதிவை பதிவேற்றப்பட்டது. அதை நூற்றுக்கணக்கானோர் ரீ ட்வீட் செய்தனர், ஆயிரக்கணக்கானோர் லைக்ஸ் செய்துள்ளனர்.
அந்த பதிவை பார்த்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மிகவும் டென்ஷனாகியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த ட்வீட் – 100% தவறானது மற்றும் தமிழகத்தில் வகுப்புவாத வன்முறையை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது – இன்றைக்குள் இது நீக்கப்படாவிட்டால், நாளை காலை கிரிமினல் புகார் பதிவு செய்யப்படும்.
நீங்கள் ஒரு கேவலமான மனிதர், ஆனால் உங்களுடைய இழிந்த மதவெறிக்கு சட்ட வரம்பு உண்டு… இது அதைத் தாண்டிவிட்டது.” என்று பதிவிட்டார்.
அமைச்சரின் கோபமான ரியாக்ஷனை பார்த்த அந்த பதிவர் ட்வீட்டை நீக்கியுள்ளார்.
இருப்பினும் அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கப்படுமா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்துள்ளது.