ரோம்,
இத்தாலியை சேர்ந்த 36 வயது நபர் ஒருவருக்கு கொரோனா, எச்.ஐ.வி, குரங்கு அம்மை என மூன்று நோய் பாதிப்பும் கண்டறியப்பட்டு இருப்பது மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஐந்து நாள் பயணமாக ஸ்பெயின் சென்று வந்த 36 வயது நபருக்கு 9 நாட்கள் கழித்து தொண்டை வலி, சோர்வு, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டுள்ளன. ஏற்கனவே கொரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் அவர் போட்டுக்கொண்டுள்ளார். அவருக்கு ஒருமுறை கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிறிய, வலி நிறைந்த கொப்புளங்கள் அவரது உடலில் தென்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற அந்த நபருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கல்லீரல் மற்றும் மண்ணீரலில் வீக்கம் இருப்பதையும் கண்டனர். பரிசோதனை முடிவுகளில் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதேபோல், குரங்கு அம்மை, எச்.ஐ.வி பாதிப்பும் உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சி அளித்தது. இது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், ” கொரோனா தொற்றும் குரங்கு அம்மை அறிகுறிகளும் ஒத்திருப்பதை எடுத்துக்காட்டும் வகையில் இது உள்ளது. அதேபோல் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டறிய மற்றும் நோய் சிகிச்சைக்கு ஆண்டிஜென் பரிசோதனையோடு ஒருவரது பாலியல் பழக்கவழக்கங்களையும் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது” என்று தெரிவித்துள்ளனர்.