நியூயார்க்,
செர்பியா நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (வயது 35). உலக தர வரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், வருகிற திங்கட் கிழமை தொடங்க இருக்கிற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி தொடரில் பங்கேற்கவில்லை என கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதன்படி, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஜோகோவிச் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், அமெரிக்க ஓபனில் விளையாட இந்த முறை என்னால் நியூயார்க்குக்கு பயணிக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்து உள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின்போதும், ஜோகோவிச் விளையாடுவதில் சர்ச்சை ஏற்பட்டது. அவர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நிலையில், அந்நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.
இந்த தேவையற்ற சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக இந்த முறை அவர் அமெரிக்க ஓபனில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்து அதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதனால், கிராண்ட்ஸ்லாம் பட்ட போட்டியை அவர் தவற விடுவது இது இரண்டாவது முறையாகும்.