ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகி விடும் என்ற பேச்சு பரவலாக உள்ளது. அதை தான் தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து கொண்டு இருக்கிறாரோ? என, பலரும் சந்தேகப்படும் வகையில் இருக்கிறது அவரது சமீபத்திய நடவடிக்கைகள்.
அதாவது, கோயம்புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கடந்த ஜனவரி மாதம் நடந்த சர்வதேச திருக்குறள் மாநாட்டில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது,‘தமிழகம் புண்ணிய பூமி, ஆன்மிக பூமி. இங்கு சிறந்த மனிதர்கள் இருந்து உள்ளார்கள். திருவள்ளுவர், விவேகானந்தர், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, மகாகவி பாராதி ஆகியோர் ஆன்மிகம் மூலம் இளைஞர்களுக்கு நல்ல அறிவுரைகள் வழங்கியுள்ளனர்’ என பேச்சை தொடங்கினார்.
இதன் பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி,‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்கிற முதல் குறளில் வரும் ஆதி பகவனும் ரிக் வேத்தில் வருகிற பரமாத்மாவும் ஓன்றே. இருந்தாலும் திருக்குறள் பெற்ற மொழிபெயர்ப்புகளில் ஆன்மிகக் குறிப்பு இல்லை’ என்று பேசி சர்ச்சைகளுக்கு பிள்ளையார் சுழியை ஆர்.என்.ரவி போட்டு வைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று டெல்லி தமிழ் கல்விக்கழகத்தில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கனவே கொளுத்தி போட்டு வைத்திருந்த சர்ச்சைக்குரிய திரியை பற்ற வைத்து இருப்பது தான் ஒட்டுமொத்த தமிழர்களையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.
இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, ‘திருவள்ளுவர் நமது பிரபஞ்சத்தின் ஒரு விடிவெள்ளி. திருக்குறள் பக்தி, வாழ்வியல், பிரபஞ்சம் என அனைத்தையும் உள்ளடக்கியது.
தமிழக ஆளுநராக நான் பதவியேற்ற பிறகு, எனக்கு திருக்குறள் புத்தகமே அதிக அளவில் பரிசாக கிடைத்தது. திருவள்ளுவரை பொறுத்தவரை உள் ஒளி மிக்க ஆன்மிகவாதி.
திருக்குறளின் முதல் குறளில் ஆதிபகவன் என்று திருவள்ளுவர் எழுதி இருக்கிறார். ஆதி பகவன் தான் இந்த உலகத்தை படைத்தார். அதைத்தான் திருவள்ளுவர் கூறுகின்றார்.
ஆனால் திருக்குறளை மொழி பெயர்த்த ஜி.யூ.போப் திருக்குறளில் உள்ள ஆன்மிக சிந்தனைகளை நீக்கிவிட்டார். மிஷனரியாக இந்தியாவுக்கு வந்த ஜி.யூ.போப் தந்திருக்கும் திருக்குறளின் மொழிபெயர்ப்பு ஆன்மா இல்லாத சவம் போல இருக்கிறது’ என சகட்டு மேனிக்கு விளாசி இருக்கிறார்.
இப்படியாக போகிற இடமெல்லாம் திருக்குறளை மொழி பெயர்த்ததில் அரசியல் விளையாடி இருப்பதாக குற்றம்சாட்டும் ஆளுநர் ரவி, ஒருப்படி மேலே போய் ஜி.யூ.போப் வேண்டுமென்றே ஆன்மிகத்தை நீக்கிவிட்டதாக பழிபோடுவது கிறிஸ்தவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ்நாட்டிற்கு வந்து 40 ஆண்டுகாலம் தமிழுக்கு சேவை செய்த பெருமைக்கு உரியர் ஜி.யு.போப். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர் என்கிற புகழுக்கும் உரியவர்.
சமத்தாக வலம்வரும் ஜூலி : டூவீலரில் ஓனருடன் ஜாலி பயணம்!
அப்படிப்பட்ட ஜி.யு.போப்பின் சேவையை பாராட்ட மனமில்லாத தமிழக ஆளுநர் இத்தனை ஆண்டுகள் கடந்தும் அவர் மீது யாரும் சுமத்தாத பழி சொற்களை சுமத்தியுள்ளதை வைத்து பார்க்கையில், வேண்டுமென்றே மதக்கலவரம் தூண்டுகிறாரோ? என, சந்தேகம் எழுவதாக பகீர் குற்றச்சாட்டுகளை கிறிஸ்தவர்கள் கொந்தளிக்கின்றனர்.