பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் துறை தலைவர் அனுராதா தனது துறை மாணவர்களிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோவில் சாதிய பாகுபாடுகளை ஏற்படுத்தும் விதமாக பேசியது சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பேஸ்புக், வாட்சாப் என அனைத்து சமூக ஊடகங்களிலும் அவர் பேசிய ஆடியோ பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் ஒரு மாணவருடன் பேசிய ஆடியோவில் “முகத்தைப் பார்த்தாலே தனக்கு மேல் சாதியா ..? கீழ் சாதியா ..? என தெரிந்துவிடும் எனவும், நீ என்ன கம்யூனிட்டி என்பது கூட எனக்கு தெரியாது என்று கூறிவிட்டு நீ என்ன கம்யூனிட்டி என்று கேட்டு தமிழ் துறை மாணவர்களின் குறிப்பிட்ட சில மாணவர்களின் பெயரை உச்சரித்து அவர்களின் சாதி குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளார். கல்லூரி மாணவர்களிடம் சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை அனுராதா சாதி குறித்து பேசியது பலரால் கண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அனுராதா மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் மனுவினை அளித்தனர். சிலர் அனுராதா மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறித்தினர். இது கல்வி ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பேசு பொருள் ஆனது.
இதற்கு முன்பாகவும் கடந்த ஆண்டும் சாதிய பாகுபாடு ஏற்படுத்தும் நோக்கில் அனுராதா ஈடுபட்டதாகவும், அவருக்கு காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பா கல்லூரிக்கு பணிமாற்று செய்ததும் தற்போது தெரிய வந்துள்ளது. மேலும், நீதிமன்றத்தில் தடைபெற்றுசென்னை பச்சையப்பன் கல்லூரியிலேயே தற்பொழுது பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பேராசிரியர் அனுராதா மீது புகார்கள் அதிகம் வந்துள்ள நிலையில், நீதியரசர் ராஜு அனுராதாவை இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.