ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதை அடுத்து அம்மாநில புதிய முதல்வராக ஹேமந்த்தின் மனைவி கல்பனா சோரன் தேர்ந்தெடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு ஜூனில் ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சுரங்க ஒதுக்கீட்டை முதல்வர் பெற்றிருப்பதாக பாஜக குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக அந்த கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதனை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதனிடையே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு எதிராக முதல்வர் ஹேமந்த் சோரன் செயல்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் இருதரப்பு விசாரணை முடிந்த நிலையில், தேர்தல் ஆணையம் ஹேமந்த் சோரனை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைத்து ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ரமேஷ் பாயிஸுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இந்த செய்தியை ஆளுநர் தரப்பு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
உறுதிப்படுத்தப்படாத பரிந்துரை என்றாலும் இந்த விவகாரம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. நாளை காலை ஆளுநரின் முடிவு அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஆளுநரின் முடிவை பொறுத்து ஹேமந்த் சோரனின் பதவிக்கான எதிர்காலம் அமையவுள்ளது. ஹேமந்த், தனது எம்எல்ஏ பதவியை இழக்க நேரிட்டால் முதல்வர் பதவியும் பறிபோகலாம். எனவே, ஹேமந்த் அடுத்தகட்ட நடவடிக்கையாக தனது மனைவி கல்பனா சோரனை முதல்வராக்க திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கேற்ப, “ஆளுநரின் உத்தரவின் அடிப்படையில், மாநில அரசு மேல்முறையீடு செய்யலாம். அதனால் அரசுக்கு உடனடியாக எந்த ஆபத்தும் இல்லை. சட்டசபையில் அறுதிப் பெரும்பான்மை உள்ளதால், அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை” ஆளும் ஜார்கண்ட் அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் ஊடகங்களுக்கு பேசியுள்ளார்.
மேலும், நள்ளிரவில் முக்தி மோர்ச்சா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதல்வர் ஹேமந்த்தை சந்தித்து ஆலோசனை நடத்திவருகின்றனர். மேலும், அனைத்து எம்எல்ஏக்களும் ராஞ்சியில் இருக்க வேண்டும் என்று ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் 81 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 30, காங்கிரஸுக்கு 18, ராஷ்டிரிய ஜனா தளம், சி.பி.ஐ.எம்.எல். கட்சிகளுக்கு தலா ஒரு எம்.எல்.ஏ. உள்ளனர்.
பாஜகவுக்கு 26, அதன் கூட்டணிகட்சிகளுக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆளும் கூட்டணியில் இருந்து 16 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு அணி மாற தயாராக இருப்பதாக அந்த கட்சி வட்டாரங்கள் கூறி வருவதால் ஜார்கண்ட் அரசியல் சூழ்நிலை திடீர் பரபரப்பாக்கியுள்ளது.