ராஞ்சி: ஜார்கண்ட் முதல்வரின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டுள்ளதால் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூனில் ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அவர், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சுரங்க ஒதுக்கீட்டை பெற்றிருப்பதாக பாஜ குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக அக்கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்று கொண்டுள்ளனர்.
இதனிடையே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு எதிராக முதல்வர் ஹேமந்த் சோரன் செயல்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையத்தில் பாஜ மனு அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் இருதரப்பு விசாரணை முடிந்தது. வெகுவிரைவில் தேர்தல் ஆணையம் முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தேர்தல் ஆணையம், தனது பரிந்துரையை ஜார்கண்ட் மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த பரிந்துரையின் மூலம் ஹேமந்த் சோரனின் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படுகிறது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் 81 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 30, காங்கிரஸுக்கு 18, ராஷ்டிரிய ஜனா தளம், சி.பி.ஐ.எம்.எல். கட்சிகளுக்கு தலா ஒரு எம்எல்ஏ உள்ளனர். பாஜவுக்கு 26, அதன் கூட்டணி கட்சிகளுக்கு 5 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆளும் கூட்டணியில் இருந்து 16 எம்எல்ஏக்கள் பாஜவுக்கு அணி மாற தயாராக இருப்பதாக அந்த கட்சி வட்டாரங்கள் கூறி வருகின்றன.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் எதிர்மறையாக முடிவு வந்தால் மனைவி கல்பனாவை (46) முதல்வராக்க ஹேமந்த் சோரன் திட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது சோரனின் பதவி பறிக்கப்பட்டதன் மூலம் அவரது மனைவி முதல்வர் ஆவாரா அல்லது வேறு யாரேனும் முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்களா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் அரசியல் களத்தில் பதற்றம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.