தமிழகத்திலிருந்து இலங்கை வழியாக சீனாவுக்கு சுறா துடுப்புகளை கடத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக கடல் பகுதியில் சுறாக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
உலகளவில் 480 வகையான சுறா மீன்கள் உள்ளன. தமிழகத்தில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பரப்பில் கலங்குச் சுறா, கணவாய் சுறா, கல்லு சுறா, கொண்டையன் சுறா, கொம்பன் சுறா, தாளன் சுறா, பஞ்சு சுறா, பால் சுறா, திமிங்கல சுறா, ஈட்டிபல் சுறா, கங்கை சுறா, சிறுபல் சுறா உள்ளிட்ட சுறாக்கள் காணப் படுகின்றன.
உலகளவில் ஆண்டொன்றுக்கு 10 கோடி சுறா மீன்கள் பிடிக்கப்ப டுகின்றன. தற்போது சுறா மீன்கள் பிடிக்கப்படும் வேகத்துக்கும், அவை இனப்பெருக்கம் செய்யும் வேகத்துக்கும் இடைவெளி அதி கரித்துள்ளது.
இதனால் சுறா மீன்களின் எண் ணிக்கை குறைந்து, அரிதாகிவரும் மீனினமாக மாறியுள்ளன.
பொதுவாக மக்கள் சுறா மீனை உணவாக எடுத்துக் கொள்வது குறைவு. சுறாக்கள் அதிக அளவில் பிடிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக சீனாவில் மருத்துவக் குணங்கள் இருப்பதாகக் கருதி சுறாவின் துடுப்புகள் கொண்டு தயாரிக்கப்படும் சூப்புக்கு அதிக கிராக்கி நிலவுவதுதான். இந்தியாவிலிருந்து மட்டும் 2012-13-ம் நிதியாண்டில் ரூ.343 கோடி அளவுக்கும், 2013-14-ல் ரூ.385 கோடி அளவுக்கும் சுறா மீன் களுடைய துடுப்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் சுறாக்களின் எண்ணிக்கை குறையத் தொடங் கியதால் 6.2.2015-ல் சுறா மீன் துடுப்புகளை ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டது. மீறினால் வன உயிரினச் சட்டப் பிரிவு 1-ன் கீழ் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என் அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் தடையை மீறி ராம நாதபுரம் மாவட்டம் வழியாக இலங்கைக்கு சுறாவின் துடுப்புகள் கடத்துவது அதிகரித்து வருகிறது. பின்னர் இலங்கையிலிருந்து எளிதாக சீனாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் ஆயிரம் சுறா மீன் களின் துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்தியாவில் திமிங்கல சுறா, பால் சுறா, ஈட்டிபல் சுறா, கங்கை சுறா உள்ளிட்ட 18 வகையான அரிய வகை சுறாக்களை பிடிப்பதற்கு தடை உள்ளது. ஆனால் மற்ற சுறாக்களை உணவுக்காக பிடிக்க தடை கிடையாது.
அதே நேரம், சுறா மீனிலிருந்து அதன் துடுப்புகளை வெட்டிய பின்னர் அது தடை செய்யப்பட்ட வகையா, இல்லையா என்பதை அறிவது மிகவும் கடினம். இதனால், அனைத்து வகையான சுறா மீன் துடுப்புகளின் ஏற்று மதிக்கும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.
கடல்வாழ் உயிரினங்களின் உணவு சங்கிலியில் முதலிடத்தில் இருப்பது சுறா மீன்கள்தான். இதன் எண்ணிக்கை குறைந்தால், கடலின் சூழலியல் பாதிக்கப்படும்.
தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் குறித்து வனத் துறை மூலம் மீனவர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வலைகளில் தெரியாமல் அந்த உயிரினங்கள் சிக்கினால், அதனை பத்திரமாக மீண்டும் கடலில் விடுவதற்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.