பாஜக தலைவர் சோனாலி போகட்டின் மரணம் குறித்து விசாரணை நடத்த கோவா காவல்துறை வியாழக்கிழமை கொலை வழக்காக பதிவு செய்துள்ளது. 42 வயதான நடிகையும்அரசியல்வாதியுமான சோனாலி போகட் செவ்வாயன்று கோவாவில் சந்தேகத்திற்கிடமான முறையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
போலீஸ் ஐ.ஜி ஓம்வீர் சிங் பிஷ்னோய், “இறந்தவரின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், அஞ்சுனா காவல் நிலையத்தில் 302 பிரிவின் கீழ் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
சோனாலி போகட்டின் சகோதரர் ரிங்கு டாக்கா புதன்கிழமையன்று போகட்டின் தனி உதவியாளர் சுதிர் சங்வான் மற்றும் அவருடைய உதவியாளர் சுக்விந்தர் ஆகியோர் சோனாலி போகட்டைக் கொன்றதாகக் குற்றம் சாட்டி புகார் அளித்திருந்தார். இருவரும் இப்போது இந்த வழக்கில் சந்தேகத்திற்குரியவர்களாகக் கருதப்பட்டு கோவா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஐ.ஜி ஓம்வீர் சிங் பிஷ்னோய் கூறினார்.
இதனிடையே, சோனாலி போகட்டின் குடும்பத்தினர், அவருடைய உடலை பிரேதப் பரிசோதனை செய்ய மறுத்தனர். ஆனால், வியாழக்கிழமை பாம்போலிமில் உள்ள கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்ய ஒப்புக்கொண்டனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்கள் இரசாயன பகுப்பாய்வு, ஹிஸ்டோபாதாலஜி மற்றும் செரோலாஜிக்கல் அறிக்கைகள் நிலுவையில் உள்ளதால் மரணத்திற்கான காரணத்தை தெரிவிக்க மறுத்தனர். இருப்பினும், உடலில் பல இடங்களில் வெளிப்படையான காயங்கள் உள்ளன என்று அறிக்கை கூறியது. போகட்டின் மரணம் எப்படி நடந்தது என்பதை விசாரணை அதிகாரி உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, சோனாலி போகட்டின் குடும்ப உறுப்பினர்கள் வியாழக்கிழமை மாலை அவருடைய சடலத்துடன் கோவாவை விட்டு வெளியேறத் தயாராக இருந்தனர். அவருடைய மருமகன் மொனிந்தர் போகட், “நாங்கள் பிரேத பரிசோதனையை மீண்டும் செய்ய வலியுறுத்த மாட்டோம். வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என்று மட்டுமே நாங்கள் விரும்பினோம். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் இப்போது (போகட்டின்) உடலுடன் வீட்டிற்கு விமானத்தில் செல்கிறோம்.” என்று கூறினார்.
அஞ்சுனாவில் உள்ள செயின்ட் அந்தோனி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அன்று 42 வயதான சோனாலி போகட் மரணம் குறித்து கோவா போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்று புகாரை பதிவு செய்தனர். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறியதை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
போகட்டின் குடும்ப உறுப்பினர்கள், அவரது சகோதரர் டாக்கா, அவரது மைத்துனர் அமன் புனியா மற்றும் அவரது மருமகன் மொனிந்தர் போகட் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை கோவா வந்தனர். சங்வான் மற்றும் சுக்விந்தர் சோனாலி போகட்டைக் கொன்றதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் புதன்கிழமை அஞ்சுனா காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். டாக்கா கையொப்பமிட்ட நான்கு பக்க புகாரில், “இருவரும் அவருடைய சொத்தை அபகரிப்பதற்காக போகட்டை கொலையைச் செய்திருக்கிறார்கள். இது ஒரு அரசியல் சதி” என்று கூறியுள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு முன்பு, சோனாலிபோகட் தனது குடும்ப உறுப்பினர்களிடம் இரவு உணவிற்குப் பிறகு அடிக்கடி தனது கைகால்களில் பதற்றம் இருப்பதாகவும், நகர்த்துவது கடினமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். “அவருடைய தனி உதவியாளர் சமையல்காரரை வேலையில் இருந்து நீக்கிவிட்டு, உணவு தேவைகளை அவரே கையாள்வார் என்று கூறினார்” என்று டாக்கா புதன்கிழமை கூறினார். இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலை என்று அவர் குற்றம் சாட்டினார். மேலும் போகட் தனது சொந்த ஊரான ஹிசாரில் இருந்து சண்டிகருக்குச் சென்றது குறித்து தனது குடும்பத்தினருக்குத் தெரிவித்ததாகவும், ஆனால் கோவா வருகை அவருடைய திட்டத்தின் பகுதியாக இல்லை என்றும் கூறினார்.
கடந்த ஆண்டு ஹிசாரில் உள்ள தனது வீட்டில் ரூ. 40 லட்சத்துக்கும் அதிகமான பணம் திருடப்பட்டதற்கு சங்வான் பின்னணியில் இருந்ததாக போகட் தெரிந்துவிட்டதாகவும் அவர் வீட்டுக்குத் சென்று அவருக்கு எதிராக புகார் அளிக்க உள்ளதாகவும் டாக்கா செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார். “இந்த கொலைக்கு ஒரு சொத்து கோணமும் இருந்தது” என்று டாக்கா கூறினார். “நாங்கள் ஹிசாரில் உள்ள போகட் வீட்டின் சாவியை சங்வானிடம் கேட்டபோது, அது காரில் இருப்பதாகவும், அவர் திரும்பி வந்ததும் அதை எங்களிடம் தருவதாகவும் கூறினார். போகட் குருகிராமில் மற்றொரு பிளாட் வைத்திருந்தார். அதற்கான சாவியை எங்களிடம் கொடுங்கள் என்று கேட்டபோது, அவர் அந்த பிளாட் அவருடையது என்று கூறினார்” என்று டாக்கா குற்றம் சாட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”