ஜம்மு – காஷ்மீரில் நேற்றிரவு சுமார் 11.59 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அளவுகோலில் முறையே 4.1, 3.2 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எவ்வித உயிர் சேதமோ பொருட் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு பகுதியில் உள்ள கத்ரா பகுதியில் இருந்து வடகிழக்கே 62 கிலோமீட்டர் தொலைவில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த செவ்வாய்கிழமை ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்து ஆறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. கத்ரா, தோடா, உதம்பூர் மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களிலும் அவை உணரப்பட்டன. அந்த நிலநடுக்கங்களிலும் உயிர் சேதமோ பொருட் சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஜம்மு பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரித்துள்ள நிபுணர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். ‘புவி அமைப்பு ரீதியாக இந்த பகுதி நீண்ட காலமாக பாதிப்பில் உள்ளது. இப்பகுதியில் இதுபோன்ற நிலநடுக்கங்கள் மேலும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.” என ஜம்மு பல்கலைக்கழகத்தின் புவியியலாளர் ஜிஎம் பட் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நிலநடுக்கத்தின்போது, செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை அறிந்து கொள்ள வேண்டும். இதுதொடர்பான விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஜிஎம் பட் கேட்டுக் கொண்டுள்ளார். பொதுவாக, பெரிய நிலநடுக்கத்துக்கு முன், சிறிய நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக ஏற்படும் எனவும் பட் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடைசியாக 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 2013ஆம் ஆண்டில் ஏற்பட்டது. அதற்கு முன், 1962ஆம் ஆண்டில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜம்மு – காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 73,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.