ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 2016-இல் வெளியான `பென்சில்’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் மணி நாகராஜ். இப்படத்திற்குக் கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து `வாசுவின் கர்ப்பிணிகள்’ என்ற வித்தியாசமான படத்தை இயக்கி வந்தார். இப்படத்தில் நாசர், `நீயா நானா’ கோபிநாத், சீதா, வனிதா விஜயகுமார், அனிகா சுரேந்திரன், கிருஷ்சிகா, லெனா குமார் எனப் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் இயக்குநர் மணிராஜ், திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். இளம் இயக்குநரான மணி நாகராஜின் மரணம் திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ படம் குறித்து ஆனந்த விகடனுக்கு பிரத்யேகமாக அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருந்தார். “ஒரு மகப்பேறு மருத்துவரிடம் வந்து சேரும் பெண்களில் நால்வரின் வாழ்வைப் பேசுகிற படம். ஒரு ஆந்தாலஜி மாதிரி” என்று இப்படம் குறித்து விவரித்திருந்தார். மேலும், “பெண்களின் வலிகள், வெளியிடப்படாத உணர்வுகள், மனக் காயங்கள், பிரச்னைகள் ஆகியவற்றை இந்தப் படம் வெளிப்படுத்துகிறது. பல நூற்றாண்டுகள் கடந்தும் துயரை மட்டுமே காணும் பெண்களின் தனிக் குரலாக இந்தப் படம் இருக்கும்” என்றும் கூறியிருந்தார்.
குறிப்பாக, இப்படம் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசிய அவர், “பெண்களின் பிரச்னைகளில் சிலவற்றை உணர்வுப்பூர்வமாகக் கையாண்டோம் என்ற திருப்தி வந்து சேர்ந்திருக்கிறது. இதை மக்களும் உணரும்போது என் உழைப்பிற்கான வெற்றியாகக் கருதுவேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
பல்வேறு கனவுகளுடன் வித்தியாசமான படங்களை எடுக்கவேண்டும் என்று திரைத்துறையில் பயணிக்க ஆசைப்பட்ட இயக்குநர் மணிராஜின் இளம் வயது மரணம் திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.