வாஷிங்டன்,
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உவால்டே நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளியில் கடந்த மே மாதம் 24-ந் தேதி நடைபெற்ற பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் கொல்லப்பட்டது அந்த நாட்டையே உலுக்கியது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது போலீசார் வந்து பதிலடி கொடுப்பதில் ஏற்பட்ட தாமதம்தான், இந்தளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது போலீசார் வந்து நடவடிக்கை எடுப்பதில் 77 நிமிடம் தாமதம் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.
இதற்கு பொறுப்பான போலீஸ் அதிகாரி பீட் அரெடோண்டோ பணி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த ஜூன் மாதத்தில் இருந்து விடுப்பில் இருந்து வந்த அவரை பணி நீக்கம் செய்வதற்கு உள்ளூர் பள்ளி வாரியம் ஒருமனதாக ஓட்டு போட்டது.
அவரை பணி நீக்கம் செய்வதற்கு உள்ளூர் பள்ளி வாரியம் ஓட்டு போட்டபோது அந்த அறையில் ஆரவாரம் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, இது தொடர்பான கூட்டம் நடைபெற்றபோது, அதில் கலந்து கொண்டவர்கள் அந்தப் போலீஸ் அதிகாரி கோழை என கோஷமிட்டதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.