ரயில்வே குரூப் டி தேர்வில் வெற்றி பெற தனது கை ரேகையை நண்பருக்கு ஒட்டி தேர்வெழுத அனுப்பிய சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது.
ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியம் (RRB), குரூப் D CBT தேர்வுக்கான அறிவிப்பை அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேர்வுகள் அனைத்தும் ஆகஸ்டு 17 முதல் 25ஆம் தேதிவரை நடக்கும் என்ற அறிவிப்பு தேர்வு நாளிற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பிற்கான தேர்வுகள் ஆகஸ்ட் 17ல் தொடங்கிய நிலையில் இன்றுடன் முடியவிருக்கின்றன.
இந்நிலையில் இந்த ரயில்வே குரூப் டி தேர்வில் வெற்றி பெற ஆசைபட்ட பீகார் முங்கர் மாவட்டத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் என்ற தேர்வாளர், தனக்கு பதிலாக தேர்வெழுத ஹாட் பான் பேஸ்டட் மூலம் தனது கைரேகையை ஒட்டி தன் நண்பர் ராஜ்யகுரு குப்தா என்பவரை தேர்வெழுத அனுப்பியுள்ளார். இந்நிலையில் தேர்வெழுத சென்ற இடத்தில் சேனிடைசர் பயன்படுத்திய போது கைரேகை ஒட்டிய தோல் நழுவி விழுந்ததில் குப்தா மாட்டியுள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கூறுகையில், எந்தவிதமான மோசடியையும் தடுக்க, அனைத்து விண்ணப்பதாரர்களும் பயோமெட்ரிக் சாதனம் மூலம் தங்கள் கட்டைவிரல் பதிவைக் வைக்க வேண்டும், அது சோதனைக்கு முன் அவர்களின் ஆதார் தரவுகளுடன் பொருத்தப்பட்டு சரிபார்க்கப்படும். அந்த சோதனையில், பலமுறை முயற்சித்த போதிலும், மணிஷ் குமார் என்ற வேட்பாளரின் கட்டைவிரல் தோற்றத்தை பதிவு செய்யும் முயற்சியில் சாதனம் தோல்வியடைந்தது.
மேலும் அவர் பேன்ட் பாக்கெட்டுக்குள் இடது கையை வைத்து எதையோ மறைக்க முயன்றதைக் கண்ட தேர்வு மையத்தின் மேற்பார்வையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் “மேற்பார்வையாளர் அவரது இடது கட்டை விரலில் சானிடைசரை தெளித்தபோது, அதில் ஒட்டப்பட்டிருந்த தோல் விழுந்துவிட்டது”.
மோசடி பற்றி அறிந்ததும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிடிபட்ட நபர் போலீசாரிடம் தனது உண்மையான பெயர் ராஜ்யகுரு குப்தா என்றும், தனது நண்பர் மணீஷ் குமார் போல தேர்வெழுத வந்ததாக கூறியுள்ளார்.
குப்தா நன்றாக படிப்பவராக இருந்ததால் ரயில்வே வேலைக்கு விண்ணப்பித்திருந்த மணீஷ் குமார், போலி அடையாளத்தைப் பயன்படுத்தி குப்தாவை ரயில்வே தேர்வுக்கு அனுப்பும் யோசனையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
பின்னர் தேர்வாளர் மணீஷ் குமார் மற்றும் அவரது நண்பர் ராஜ்யகுரு குப்தா இருவருக்கும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 465 (போலி), 419 (ஆள்மாறாட்டம் மூலம் ஏமாற்றுதல்) மற்றும் 120-பி (குற்றச் சதி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM