நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம், 7 நாட்களிலேயே 50 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது.
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், மித்ரன் ஆர் ஜவஹர் எழுத்து இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி கடந்த 18-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்தில் ஷோபனா கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனன் அழகான, ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதேபோல் சீனியர் திருச்சிற்றம்பலமாக இயல்பான நடிப்பால் இயக்குநர் பாரதிராஜா ரசிகர்களை படம் முழுவதும் சிரிக்க வைத்திருப்பார். ‘தி கிரே மேன்’ போன்ற ஹாலிவுட் படத்திற்குப் பிறகு, பக்கத்து வீட்டு பையன் கதாபாத்திரத்தில், காதலுக்காக ஏங்கும் சராசரி பையனாக, ‘3’, ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தைப்போன்று நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் நடித்துள்ளார். அனிருத்தின் இசையும் கூடுதல் பலம் சேர்த்துள்ளதால், இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், படம் வெளியாகி 7 நாட்களில் 51.42 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. வார நாட்கள் என்றாலும் படத்திற்கான வரவேற்பு அதிகரித்தே காணப்படுகிறது. மேலும், வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி தான் விக்ரமின் ‘கோப்ரா’, பா. ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஆகியப் படங்கள் வெளியாவதால், இன்னும் ஒருவார காலத்திற்கு நல்ல வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.