இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் சுங்கச்சாவடிகள் உள்ளதாக தரவுகள் கூறுகின்றன. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 800-க்கும் கூடுதலான சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில் 566 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றில் 48 சாவடிகள் தமிழகத்தில் உள்ளன.
தேசிய நெடுஞ்சாலைகளையும், மாநில நெடுஞ்சாலைகளையும் பராமரித்தல் மற்றும் மேம்படுத்துவதற்காக அனைத்து வாகனங்களிடமும் சாலை வரி வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பெட்ரோல், டீசல் மீதும் லிட்டருக்கென்று சாலை மற்றும் உட்கட்டமைப்பு கூடுதல் தீர்வையாக வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளில், செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, கார், வேன், ஜீப்களுக்கு 5 ரூபாயும், டிரக், பஸ், பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு 150 ரூபாய் வரையும் உயர்த்தப்படவுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏற்கனவே 22-ல் ஏப்ரல் மாதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மேலும் 28 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது வாகன உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.