திருப்பூரை போன்று மற்ற மாவட்டங்களும் மாற வேண்டும் என்பது எனது விருப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!

திருப்பூர்: திருப்பூரை போன்று மற்ற மாவட்டங்களும் மாற வேண்டும் என்பது எனது விருப்பம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பூரில் தொழில் முனைவோர் மண்டல மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொழில்முனைவோருக்கு கடனுதவிகளை வழங்கினார். பின்னர் மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; முதல்வராக பொறுப்பேற்று 4 முறை திருப்பூருக்கு வந்து விட்டேன். இனியும் வருவேன். விடுதலை போராட்ட காலத்திலும் திராவிட இயக்க வரலாற்றிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது திருப்பூர். திருப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு.

திமுக ஆட்சியில் தான் திருப்பூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. உடுக்க உடை என்றால் அது திருப்பூர் இல்லாமல் இருக்க முடியாது. திருப்பூர் என்றாலே நினைவுக்கு வருவது பின்னலாடை தான். தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமல்லாமல் தொழிலாளர்கள் வளரும் ஊராக திருப்பூர் உள்ளது. திருப்பூரில் 57,900 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. பின்னலாடை நிறுவனங்களில் 8 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளில் 50% ஏற்றுமதி செய்யப்படுகிறது.

காங்கேயம், தாராபுரம், உடுமலைப்பேட்டையில் கயிறு சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. திருப்பூர் பல்வேறு தொழில்களில் முன்னேறி வருகிறது. திருப்பூரை போன்று மற்ற மாவட்டங்களும் மாற வேண்டும் என்பது எனது விருப்பம். வேளாண்மைத்துறைக்கு அடுத்தப்படியாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக வேலை வாய்ப்பை உருவாக்குகின்றன. அனைத்து மாவட்டங்களும் சீராக வளர வேண்டும். முதலீட்டாளர் மாநாடு மூலம் 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு ரூ.2.20 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.

அரசின் உத்தரவாதத்தால் வங்கிகள் போட்டிப் போட்டு கடன் அளிக்க முன் வருவார்கள். குடிசைத் தொழிலாக இருந்த வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் உற்பத்தி தொழில், சிறப்பு தொழில் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து ஜவுளி பொருட்கள் தயாரித்தாலும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனம் மூலமாக முதலீட்டு மானியம் வழங்கப்படும். ஒற்றைசாளர இணையதளம் 2.0ல் 10,580 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 9,212 விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு வகை தொழில்கள் துறையில் சேர்க்கப்பட்டு முதலீட்டு மானியம் வழங்கப்படும் இவ்வாறு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.