திருவாரூர் மாவட்டம், குடவாசலை அடுத்த அரசவனங்காடு கிராமத்தில் அருள்மிகு மதிலழகி காளியம்மன் திருக்கோயில் வளாகத்தில், அரசு – வேம்பு திருக்கல்யாணம் நேற்று (24.08.2022 ) நடைபெற்றது. அரச மரமும் வேம்பமரமும் சேர்ந்து நிற்கும் இடங்களில் இந்த தெய்விக மரங்களுக்குத் திருமணம் செய்துவைக்கும் முறை, காலம் காலமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் அரசவனங்காடு கிராமத்தில் உள்ள பழைமையான அரசு வேம்பு விருட்சங்களுக்கு நேற்று 7-ம் ஆண்டாகத் திருக்கல்யாணம் செய்விக்கப்பட்டது. விரைவில் திருமணம் நடைபெற வேண்டி இளைஞர்களும் கன்னிப்பெண்களும் சிறப்புப் பிரார்த்தனை செய்து கொண்டனர். பக்தர்கள் குடும்பம் குடும்பமாகக் கலந்து கொண்டு மங்கலப் பொருள்களை சீர்வரிசையாக எடுத்து வந்தனர். சிவாச்சாரியார்கள் வேத பாராயணம், திருமுறை பாராயணம் நடைபெற்றது. இதையொட்டி ஹோமம் செய்விக்கப்பட்டு பூர்ணாஹூதி நடந்தது. இதைத் தொடர்ந்து அரசு – வேம்புவை இறைவன் இறைவியாக பாவித்து சிறப்பு அபிஷேகம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தனர். பிறகு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தரிசனம் செய்த பக்தர்கள், இறைச் சிந்தனையோடு விருட்சங்களை வலம் வந்து வணங்கினர்.
இதில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கிய திருவடிக்குடில் சுவாமிகள்,
“புதியன புகுதல் என்கிற வகையில் எத்தனையோ புதுப்புது வழிபாடுகளும், ஆலயங்களும் வந்தாலும், இயற்கை நலன் சார்ந்த வழிபாட்டில் தமிழர்கள் தொன்றுதொட்டு ஈடுபட்டு வருவதும், கிராமங்களில் அந்த வழிபாட்டை உயிரோட்டமாக வைத்திருப்பதும், மகிழ்ச்சிக்குரியது. மனிதனுக்குத் தேவையான காற்று மண்டலத்தை சுத்திகரிப்பதுடன் கண்களுக்குக் குளிர்ச்சியை வழங்கியபடி மரங்கள் ஒன்றை ஒன்று தழுவி நிற்கும் காட்சியில், அரசமரம் குடும்பத் தலைவருக்குண்டான கடமையையும், பொறுப்பையும் எடுத்துக் கூறுவதுபோல அடங்கி நின்றாலும், வேம்பு வலிமையுடையதென பெண்மையைப் பறைசாற்றுகிறது.
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்
என்ற திருக்குறள், மனிதன் எவ்வாறு இந்த உலகுக்குப் பயன் உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதுபோல, கவையாகிக் கொம்பாகி… என்கின்ற பாடல் மூலம் மனிதன் எவ்வாறு இருக்கக் கூடாது என்பதற்கும் மரத்தையே உதாரணம் காட்டினார் ஔவையார். எனவே, மரத்திற்குக் கல்யாணம் என்று எண்ணிவிடாமல், இதனுடைய உட்பொருளைஆழ்ந்து சிந்திக்க வேண்டும். நற்சிந்தனையால் பயன்பெற வேண்டும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அருள் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினரும் கிராம மக்களும் செய்திருந்தனர்.