புதுடெல்லி: தேர்தல் இலவசம் தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என கூறிய உச்ச நீதிமன்றம், இதற்காக ஒன்றிய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டலாமே? என கேள்வி எழுப்பி உள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் இலவசங்கள் அறிவிப்பதற்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஒன்றிய அரசு, நிதி ஆயோக், சட்ட ஆணையம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரை கொண்ட நிபுணர் குழுவை அமைக்க பரிந்துரைத்தது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, சி.டி.ரவிக்குமார் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தலைமை நீதிபதி ரமணா, ‘‘தேர்தலின் போது அரசியல் கட்சிகள் மட்டுமே இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. ஆனால், போட்டியிடும் எந்த தனிநபர்களும் அவ்வாறு செய்வதில்லை. நான் தேர்தலில் தனித்து நின்றால், 10 வாக்கு கூட கிடைக்காது. தற்போதைய அமைப்பில் தனி நபர்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. நமது ஜனநாயகம் அப்படித்தான் இருக்கிறது. எனவே, தேர்தல் இலவசம் குறித்து தீவிரமாக விவாதம் செய்ய வேண்டும். இந்த பிரச்னை தீவிரமானது என்பதில் சந்தேகமில்லை. இதற்காக ஒன்றிய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதம் நடத்தலாமே?’’ என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இலவசம் வழங்குவதை அடிப்படை உரிமையாகக் கருதும் சில அரசியல் கட்சிகள் உள்ளன. இலவசம் வழங்குவதன் மூலம் ஆட்சிக்கு வந்தவர்களும் உள்ளனர். இந்த விஷயத்தில் நீதிமன்றத்திற்கு அரசு அனைத்து வகையிலும் உதவும். நிபுணர் குழு அமைக்கப்படும் பட்சத்தில் 3 மாதத்தில் அது அறிக்கை தாக்கல் செய்ய முடியும்,’’ என்றார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
ஓய்வு பெற்றவர்களுக்கு நாட்டில் மதிப்பில்லை
நிபுணர் குழுவுக்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோதாவை நியமிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பு வக்கீல் விகாஸ் சிங், தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு தலைமை நீதிபதி ரமணா, ‘‘ஓய்வு பெற்றவர்கள் அல்லது ஓய்வு பெறப் போகிறவர்களுக்கு இந்த நாட்டில் மதிப்பில்லை. அதுதான் பிரச்னை’’ என்றார். அதற்கு வக்கீல் விகாஸ் சிங், ‘‘ஒருவரின் ஆளுமையும், வகித்த பதவியும் தான் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது’’ என பதிலளித்தார்.