ஸ்ரீநகர்: தீர்மனங்கள் நிறைவேற்ற கட்சியினருக்கு உரிமை உள்ளது என்றும், ஆனால், இது குறித்த இறுதி முடிவு தேர்தல் நடக்கும்போதுதான் முடிவு செய்யப்படும் என்றும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்த மத்திய அரசு, சட்ட சபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரையும், லடாக்கை தனி யூனியன் பிரதேசமாகவும் பிரித்தது.
சிறப்பு அந்தஸ்தை மீட்போம்
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்தன. ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரதான கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சி, சிபிஎம், அவாமி தேசிய மாநாடு மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகள் இணைந்து குப்கார் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீட்போம் என்ற அறைகூவலுடன் குப்கார் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
தீர்மானம் நிறைவேற்றம்
குப்கார் கூட்டமைப்புகள் ஒருங்கிணைந்து ஜம்மு காஷ்மீரில் முக்கிய அரசியல் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. ஜம்மு காஷ்மீரில் தேர்தல் தொகுதி மறுவரையறையை முடித்த மத்திய அரசு, அங்கு தேர்தல் நடத்த ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. இதற்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட வேலைகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பரபரப்பான சூழலில், தேசிய மாநாட்டு கட்சியின் மாகாண குழு சார்பில், ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்படும்
அதில், ஜம்மு காஷ்மீர் சட்ட மன்ற தேர்தலில் 90 இடங்களிலும் தேசிய மாநாட்டு கட்சி போட்டியிட வேண்டும் என்றும் குப்கார் கூட்டமைப்பில் உள்ள பிற கட்சிகளுடன் இணைந்து போட்டியிடக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரம் பேசுபொருளாக மாறிய நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, ”ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளிலும் தேசிய மாநாட்டு கட்சி போட்டியிடுமா? என்பது குறித்து இறுதி முடிவு, தேர்தல் நடைபெறும் சமயத்தில் அறிவிக்கப்படும்” என்றார்.
கட்சியினருக்கு உரிமை உள்ளது
செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய பரூக் அப்துல்லா கூறுகையில், ”குப்கார் கூட்டமைப்பு ஒருபோதும் தனது கதவுகளை அடைத்துக்கொள்ளாது. தேசிய மநாட்டு கட்சி ஒரு ஜனநாயக கட்சி. எனவே, தீர்மனங்கள் நிறைவேற்ற கட்சியினருக்கு உரிமை உள்ளது. ஆனால், இது குறித்த இறுதி முடிவு தேர்தல் நடக்கும்போதுதான் முடிவு செய்யப்படும்” என்றார். குப்கார் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள சில கட்சிகள் தேசிய மாநாட்டு கட்சியை விமர்சித்து சமீப காலமாக அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனவே என பரூக் அப்துல்லாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
சகிப்புத்தன்மை மற்றும் பொறுமை
இதற்கு பதிலளித்த பரூக் அப்துல்லா, ”தேசிய மாநாட்டு கட்சிக்கு எதிராக வரும்.ஆனால் இது நமது சகிப்புத்தன்மையை காட்டுவதாக இருக்க வேண்டும். சகிப்புத்தன்மை இல்லையென்றால் மக்களுக்காக நம்மால் எதையுமே செய்ய முடியாது. சகிப்புத்தன்மை பொறுமை ஆகிய இரண்டு விஷயங்களை நாம் மனதில் கொள்ள வேண்டும். தியாகம் செய்யவும் ஒருவர் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.