திருப்பூர்: “ஒற்றைச்சாளர இணையதளம் 2.0-வை நான் கடந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கி வைத்தேன். அதில் இதுவரை MSME நிறுவனங்களிடமிருந்து 10 ஆயிரத்து 555 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 9 ஆயிரத்து 212 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 87 விழுக்காடு விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருப்பூரில் சிறு குறு தொழில்துறை மண்டல மாநாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியது: ” தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து 2092 நிறுவனங்களுக்கு 2013 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 99 விழுக்காடு MSME நிறுவனங்களுக்குத்தான் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் மனைகளை வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், இளைஞர்கள் படிப்பில் மட்டுமல்ல அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்துவதே முக்கிய நோக்கமாக கொண்டு வாழ்க்கையிலே வெற்றி பெறுவதற்காக “நான் முதல்வன்” என்ற திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டம் மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தற்போதைய நான்காம் தொழில் புரட்சி காலத்தில் புதிய தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்தியாக வேண்டும். அதற்கு வழிகாட்ட பன்னாட்டு நிறுவனங்களுடன் தமிழக அரசு கைகோர்த்திருக்கிறது. ஒவ்வொரு மாவட்ட தொழில் மையத்திலும், ஒரு ஏற்றுமதி வழிகாட்டி மையம் விரைவில் தொடங்கப்படும்.
ஒற்றைச்சாளர இணையதளம் 2.0-வை நான் கடந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கி வைத்தேன். அதில் இதுவரை MSME நிறுவனங்களிடமிருந்து 10 ஆயிரத்து 555 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 9 ஆயிரத்து 212 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 87 விழுக்காடு விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.