நொய்டா: உத்தர பிரதேசம் நொய்டாவில் எமரால்டு கோர்ட் வளாகத்தில் ‘சூப்பர் டெக்ஸ்’ என்ற பெயரில் பிரமாண்டமான இரட்டை கோபுரங்கள் கட்டப்பட்டன. இதில், அபெக்ஸ் எனும் கட்டிடம் 32 மாடிகளுடன் 328 அடி உயரமும், சியான் எனும் கட்டிடம் 31 மாடிகளுடன் 318 அடி உயரமும் கொண்டவை.
இந்த இரண்டு கோபுரங்களும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவற்றை இடிக்க உத்தரவிட்டது.
அந்த இரட்டை கோபுரங்களை இடிக்கும் பணி ‘எடிஃபைஸ்’ என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எடிஃபைஸ் பொறியியல் நிறுவனத்தின் திட்ட அதிகாரி மயூர் மேத்தா கூறியதாவது:
அபெக்ஸ் மற்றும் சியான் ஆகிய இரட்டை கோபுரங்களை இடிப்பதற்காக கட்டிடத்தின் தூண்களில் வெடிபொருள் நிரப்பும் பணி ஆகஸ்ட் 13-ல் தொடங்கியது. அப்பணிகள் நேற்றுமுன்தினம் நிறைவடைந்தன. இந்த கட்டிடத்தை இடிப்பதற்காக சுமார் 3,700 கிலோ வெடிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கட்டிட இடிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவினர் நேற்று முதல் ஒவ்வொரு தளத்திலும் வெடிபொருட்களை இணைக்கும் (டிரக்கிங்) பணியில் ஈடுபட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆகஸ்ட் 28 மதியம் 2.30 மணிக்கு டெட்டனேட்டருடன் இணைக்கப்பட்டு இரட்டை கோபுரம் தகர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.