பயங்கரவாதிக்கு அரிய வகை ரத்தம் கொடுத்து காப்பாற்றிய இந்திய ராணுவத்தின் மனிதாபிமானம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த வந்த பயங்கரவாதியை சுட்டுப்பிடித்த இந்திய ராணுவத்தினர் அந்த பயங்கரவாதிக்கு அரிய வகை ரத்தமான ‘ஓ நெகட்டிவ்’ தானம் கொடுத்து காப்பாற்றியுள்ளனர். இந்திய ராணுவத்தின் மனிதாபினமாத்தை பலரும் பாராட்டியுள்ளனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷேரா பகுதியில் ஜங்கார் பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி 4 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்த முயன்றதில் துப்பாக்கி சூடு மோதல் ஏற்பட்டது. இதில், படுகாயமடைந்த தபராக் உசைன் என்ற பயங்கரவாதியை இந்திய ராணுவம் பிடித்தது. இதன்பின் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

32 வயதான பயங்கரவாதி உசைன் கூறுகையில், ‘பாகிஸ்தான் ராணுவத்தின் கர்னல் யூனூஸ் என்பவர் அனுப்பி நாங்கள் தற்கொலை தாக்குதல் நடத்த வந்தோம். இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்த எனக்கு அவர் ரூ.30 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். இதற்காக இந்திய ராணுவத்தின் 2 நிலைகளுக்கு சென்று வந்துள்ளேன்’ என்றார்.

latest tamil news

உசைன் பிடிப்பட்டது குறித்து இந்திய ராணுவ பிரிகேடியர் ராஜிவ் நாயர் கூறியதாவது: உசைனின் தொடை மற்றும் தோள்பட்டையில் 2 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ரத்தம் வழிந்தோடியது. சிக்கலான நிலையில் இருந்த உசைனுக்கு இந்திய வீரர்கள் 3 பாட்டில் வரை ரத்தம் கொடுத்தனர். உசைனுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. ஐ.சி.யூ.,வில் வைக்கப்பட்ட பின்னர் உசைனின் உடல்நிலை சீரானது. எனினும், குணமடைய சில வாரங்கள் ஆகும்.

latest tamil news

உசைனை ஒரு பயங்கரவாதியாகவே நாங்கள் நினைக்கவில்லை. ஒரு நோயாளியை போன்று நினைத்து, உசைனின் உயிரை காப்பாற்றவே சிகிச்சை அளிக்கப்பட்டது. ராணுவ வீரர்களின் ரத்தம் சிந்த வைக்க வந்த நபருக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் ரத்தம் கொடுத்தது அவர்களது பெருந்தன்மை. உசைனின் ரத்த வகை மிக அரிய வகையான ‘ஓ நெகட்டிவ்’ ஆகும். இவ்வாறு அவர் கூறினார். நமது வீரர்களின் ரத்தத்தை சிந்த பயங்கரவாதியாக வந்த ஒருவனுக்கு ரத்தம் கொடுத்து காப்பாற்றிய இந்திய ராணுவத்தின் மனிதாபிமானத்தை பலரும் பாராட்டியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.