பரந்தூர் விமான நிலையம் அமைய 12 கிராமங்கள் எதிர்ப்பு: அன்புமணியின் கருத்து கேட்பு கூட்டத்தால் மேலும் சலசலப்பு…

சென்னை: சென்னையின் 2வது விமானநிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த  விமான நிலையம் அமைய 12 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாமகவும் களத்தில் இறங்கி, இன்று கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது, இந்த விவகாரத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

பரந்தூரில் விமான நிலையம் அமைவதை பாமக ஏற்காது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார். இதனால் இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்து உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிதாக விமான நிலையம் அமைக்கப் போவதாக மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளன. ஆண்டுக்கு சுமார் 10 கோடி பயணிகளைக் கையாளக்கூடிய திறனுடன் அமையவிருக்கும் இந்த விமான நிலையத்துக்கான உத்தேச திட்ட மதிப்பீடு 20 ஆயிரம் கோடி ரூபாய் என்கிறார்கள். அதைத்தொடர்ந்து நிலம் கையகப்படுத்தப்படும் என திமுக அரசு அறிவித்தது. இதுகுறித்து கூறிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பரந்தூர் விமான நிலையத்தால், தமிழகத்தில் இரண்டாவது தொழில்புரட்சி உருவாகும் பெருமிதமாக கூறினார்.

இந்த நிலையில், அந்த பகுதி பொதுமக்களோ, தங்களது, விளை நிலங்களையும் நீர்நிலைகளையும் குடியிருப்புகளையும் அழித்துவிட்டு வரும் விமான நிலையம் தேவையில்லை என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  எங்களுக்கு வேண்டாம் என 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போர்க்கொடி தூக்குகிறார்கள்.

புதிய விமான நிலையம் அமையவிருக்கும் பகுதிக்குள்  பரந்தூர், நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மரப்புரம், ஏகனாபுரம், சிங்கிள்பாடி, குனகரம்பாக்கம், மகாதேவி மங்களம், மேலேரி, இடையார்பாக்கம், அக்கம்மாபுரம் ஆகிய அந்த 12 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் முழுமையாக அழிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால்,  விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், . ஏகனாபுரத்தில் 3 ஏரிகள், நெல்வாய் கிராமத்தில் 2 ஏரிகள், நாகப்பட்டில் 2 ஏரிகள் இதனால் அழியும் ஆபத்தும் இருக்கிறது. மேலும், குளங்கள், தாங்கல்கள், கால்வாய்கள் என நீர்ப்பிடிப்புப் பகுதிகளும் பாதிக்கப்படும் என கூறி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆகஸ்டு 15ந்தேதி நடைபெற்ற கிராமசபை கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த விவகாரத்தில் தற்போது பாமகவும் மூக்கை நுழைத்துள்ளது. கருத்துக்கேட்பு கூட்டம் என்ற பெயரில் மக்கள் கூட்டத்தை கூட்டி, பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளது.

பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக பாமக சார்பில் இன்று காஞ்சிபுரத்தில் அக்கட்சியின் தலைவரும் எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் தலைமையில் மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்காக அந்த பகுதி மக்கள் அதிக அளவில் கூடினர். அவர்களிடையே பேசிய   பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “விமான நிலையத்துக்கு பரந்தூரை எந்த அடிப்படையில் தேர்வு செய்தார்கள் என்று எங்களுக்கு தெரியாது. வெறும் அறிவிப்புதான் வந்திருக்கிறது. அதனுடைய நுட்பங்கள் இன்னும் எங்களுக்கு தெரியவில்லை. என்ன வழியில் வரப்போகிறது, நீர்நிலைகளை என்ன செய்யப்போகிறார்கள் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

நமக்கு வளர்ச்சி தேவை. நவீன வளர்ச்சிக்கு கட்டுமானங்கள் தேவை. ஆனால் ஒன்றை அழித்து, இன்னொன்றை உருவாக்குவது தேவை இல்லை. அதாவது ஒரு பக்கம் வளர்ச்சி, மற்றொரு பக்கம் விவசாயம், வேளாண்மை, சுற்றுச்சூழல். ஆக, இரண்டையும் சமமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

ஒன்றை அழித்துத்தான் இன்னொன்றை கொண்டுவருவோம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இரண்டுமே சமமாக இருக்க வேண்டும். விவசாயத்தை அழித்துவிட்டு கட்டடங்கள் கட்டித் தருவதை பாமக ஏற்காது. அது, பாமகவின் கொள்கையும் அல்ல என்று கூறினார்.

பரந்தூர் விமான நிலையம் விவகாரத்தில் பாமகவும் உள்ளே புகுந்து குட்டை குழப்பி இருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரம்! அமைச்சர் தங்கம் தென்னரசு விரிவான விளக்க அறிக்கை…

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் தமிழக அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு! அறப்போர் இயக்கம் பகீர் குற்றச்சாட்டு…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.