திருப்பத்தூர்: ஆம்பூரில் ஃபரிதா குழுமத்துக்கு சொந்தமான தோல், காலணி ஆலைகள் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையை தலைமையிடமாக கொண்ட பிரபல நிறுவனமான பரிதா குழுமம், ஷூ, பெல்ட் , தோல் பை உள்ளிட்ட தோல் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்த குழுமத்தில் பரிதா ஷூஸ், பரிதா லெதர், உள்பட சுமார் 11 துணை நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிலையில் பரிதா குழும நிறுவனம் வருமானத்தை குறைத்துக்காட்டியதோடு அதிக சொத்துக்களையும் குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. குறிப்பாக கொரோனா காலத்தில் வரி ஏய்ப்பு நடைபெற்றதாக அந்த நிறுவனம் மீது குற்றச்சாட்டு வந்தது. இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில், பரிதா குழுமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வருமான வரித்துறை சோதனையை தொடங்கியது.
தமிழகம் முழுவதும் உள்ள பரிதா குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். மொத்தம் சென்னை, திருப்பத்தூர், ஆம்பூர் என பரிதா குழுமத்துடன் தொடர்புடைய 32 இடங்களில் சோதனை நடைபெற்றது. இரவு வரை நீடித்த இந்த சோதனை நேற்றும் தொடர்ந்தது. இதில், ஆலைகளின் உரிமையாளர்கள், மேலாளர்களின் வீடு மற்றும் அலுவலங்களிலும் இந்த சோதனை நடந்தது.
குறிப்பாக ஆம்பூரில் இருக்கும் பரிதா குழுமத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகளில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் முக்கிய தகவல்கள் அடங்கிய பென் டிரைவ் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் ஏற்றுமதி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைகளில் போது கைப்பற்றப்பட்ட கணிணியில் இருந்த ஆவணங்களை சுமார் 20 ஆயிரத்துக்கு அதிகமான பக்கங்களில் காகித வடிவில் அதிகாரிகள் பிரதி எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக இந்த சோதனை இன்றும் நடந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 60 இடங்களில் பரிதா குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.