பள்ளியில் 3 மாணவிகள் விஷம் குடிப்பு: தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஒரே பள்ளியை சேர்ந்த 3 மாணவிகள் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மூவர் நெருங்கிய தோழிகள். நேற்று இவர்கள், பள்ளியில் இருந்தபோது எறும்பு பொடியை தண்ணீரில் கலக்கி குடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக 2 மாணவிகள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், ஒரு மாணவி தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி, சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். மற்ற இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தில் முறையிட்டனர்.

மாணவிகள் விஷம் குடித்த தகவலறிந்து அமைச்சர் கீதாஜீவன், சப்-கலெக்டர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வக்குமார் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தி, சிகிச்சையை துரிதப்படுத்தினர். தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி மற்றும் அதிகாரிகள் மற்றும் போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடந்த விவரம் குறித்து கேட்டறிந்தனர். மேலும் பள்ளி நிர்வாகத்தினரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி கூறுகையில், ‘‘விஷம் சாப்பிட்டதாக 2 மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் நலமுடன் உள்ளனர். அவர்களுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை. அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது’’என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.