புதுடெல்லி: ‘ஆம் ஆத்மி கட்சியிலிருந்து 40 எம்எல்ஏக்களை பிரிக்க ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்ற பெயரில் பாஜக மேற்கொள்ளும் சதி தோல்வியடைய வேண்டும்’ என்ற நோக்குடன் கேஜ்ரிவால் தலைமையில் எம்எல்ஏக்கள் இன்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரார்த்தனை செய்தனர்.
டெல்லியில் இன்று கேஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் அவசரமாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின்னர் பேசிய ஆம் ஆத்மி தலைவர் சவுரவ் பரத்வாஜ், “மொத்தமுள்ள 62 எம்எல்ஏக்களில் 50 பேர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர். இன்று வராதவர்கள் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் தொலைபேசி வாயிலாக தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். தங்களின் இறுதி மூச்சுவரை ஆம் ஆத்மிக்கு உண்மையாக இருப்போம் என்று உறுதியளித்துள்ளனர்” என்றார்.
கூட்டத்திற்குப் பின்னர் கேஜ்ரிவால் மற்றும் எம்எல்ஏக்கள் சேர்ந்து ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்திற்குச் சென்றனர். அங்கே ‘பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸ் தோல்வியடைய வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்தனர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கேஜ்ரிவால், “எங்கள் எம்எல்ஏக்கள் 40 பேரை விலைக்கு வாங்க பாஜகவினர் முயற்சித்தனர். ரூ.20 கோடி பேரம் பேசப்பட்டது. இந்நிலையில் ஒரே ஒரு எம்எல்ஏவைக்கூட அவர்களால் விலைக்கு வாங்க முடியவில்லை என்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி” என்றார்.
‘டெல்லி சட்டப்பேரவை தொகுதியின் பலம் 70 உறுப்பினர்கள். தற்போது ஆம் ஆத்மிக்கு 62 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு 8 பேர் உள்ளனர். இதனால் 40 எம்எல்ஏக்களை பிரிக்க பாஜக திட்டமிடுகிறது. கட்சித் தாவல் சட்டத்தினை எதிர்கொள்ளாமல் 40 பேர் வரை பிரிக்கப்படலாம் என்பதால், அதற்கான முயற்சிகளை பாஜக எடுக்கிறது’ என்று ஆம் ஆத்மி வட்டாரம் தெரிவிக்கின்றது.