டெல்லி: பஞ்சாப்பில் ஜனவரி 5ம் தேதி பிரதமர் மோடி பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் கடந்த ஜனவரி 5ல் நாட்களுக்கு முன் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பதிண்டா விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி காரில் சென்றார். அப்போது பயண வழியில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அவரால் பயணத்தைத் தொடர முடியவில்லை. நிகழ்ச்சியில் பங்கேற்காமல் அவர் ெடல்லி திரும்பினார். பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒன்றிய உள்துறை அமைச்சகமும், மாநில அரசும் தனித்தனியாக குழுக்களை அமைத்து விசாரணையை தொடங்கின. இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்கக் கோரி ‘லாயர்ஸ் வாய்ஸ்’ என்ற அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றம் நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. இந்த குழுவில் பஞ்சாப் உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர், பஞ்சாப் டிஜிபி, சண்டிகர் டிஜிபி மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
முழு விசாரணை அறிக்கையும் பிரமாண பத்திரமாக இந்த குழு நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். அதுவரை ஒன்றிய, மாநில அரசுகள் முன்னதாக நியமித்த குழுக்கள் தங்களது விசாரணையை மேற்கொள்ள கூடாது. இதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடி பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஜனவரி 5ல் மோசமான வானிலையால் பிரதமர் ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து விட்டு சாலை மார்க்கமாக சென்றார். பயணத்தின் போது சில போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டதால் அவர் 20 நிமிடம் காரிலேயே காத்திருக்க நேர்ந்தது. பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது உண்மைதான். பெரோஸ்பூர் காவல் உதவி கண்காணிப்பாளர் தனது பணியை சரியாகச் செய்யவில்லை. சட்டம் ஒழுங்கை முறையாகப் பராமரிக்கவில்லை என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.