கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் மானந்தவாடி தாலுகா பேகூர் வனப்பகுதியில் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பபாறா என்ற பகுதியில் யானை குட்டி ஒன்று தனியாக உலவுவதைக் கண்டு அருகில் சென்றுள்ளனர். மேலும் அந்த குட்டியின் உடலில் காயங்கள் இருப்பதையும் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, உடனடியாக முத்தங்கா வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து கால்நடை மருத்துவர்களை அழைத்து யானை குட்டிக்கு சிகிச்சை அளித்துள்ளனர். காயங்கள் ஓரளவிற்கு குணமடைந்து உடல்நிலை தேறி வருகிறது. தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டியை மீண்டும் தாயிடமே சேர்க்கும் முயற்சியாக பக்கத்தில் உலவிய யானை கூட்டத்துடன் சேர்த்துள்ளனர். தொடர் கண்காணிப்பிலும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கேரள வனத்துறையினர் தெரிவித்துள்ளதாவது, “காயத்துடன் மீட்கப்பட்ட இந்த யானைக் குட்டிக்கு ஒரு வயது இருக்கலாம். மீட்கப்பட்ட பகுதியில் புலியின் கால்தடங்கள் இருப்பதை உறுதி செய்திருக்கிறோம். புலி ஒன்று இதை வேட்டையாட முயன்றபோது லேசான காயத்துடன் தப்பியிருக்கிறது. தற்போது இதை தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியாக பக்கதில் உலவும் யானைக் கூட்டத்துடன் சேர்த்து கண்காணித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளதாவது, “யானைக் குட்டி மீட்கப்பட்ட இடத்தில் புலி நடமாட்டம் இருப்பதாக வனத்துறை தெரிவித்திருக்கிறது. புலி ஒன்று வேட்டையாடும் போது தான் காயம் ஏற்பட்டிருக்கிறது என்பதையும் உறுதி செய்திருக்கிறார்கள். புலியின் உணவு பட்டியலில் யானையும் இருக்கிறது. வனத்துறையின் இது போன்ற செயல்கள் இயற்கைக்கு மாறான செயலாக இருக்கிறது” என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.