பெகாசஸ் வழக்கு விசாரணைக்கு ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை: நிபுணர் குழு குற்றச்சாட்டு

புதுடெல்லி: பெகாசஸ் வழக்கு விசாரணைக்கு ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை என்று நிபுணர் குழு குற்றம் சாட்டியது. வழக்கை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இஸ்ரேல் பாதுகாப்பு துறையின் ஒரு பிரிவான என்எஸ்ஓ நிறுவனத்தின் தயாரிப்புதான் பெகாசஸ் உளவு மென்பொருள். இந்நிறுவனம் இந்த மென்பொருளை பல நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு விற்பனை செய்து வருகிறது. நாட்டுக்கு எதிராக சதி திட்டங்கள் தீட்டுபவர்களை கண்டறிய இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பத்திரிகையாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், அரசியலமைப்பு பதவியில் இருப்போர், தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் இந்த மென்பொருள் மூலம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் செய்த அமளியில் கடந்த ஆண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் முடங்க, சுப்ரீம்கோர்ட்டால் 3 பேர் கொண்ட தனி விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த விவகாரம் மீண்டும் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதைத்தொடர்ந்து, 3 நபர் குழு நடத்திய விசாரணை முடிவடைந்த நிலையில், பெகாசஸ் விசாரணை அறிக்கையை கடந்த மே 19ம் தேதி சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள், பெகாசஸ் விசாரணை ஆணையத்துக்கு அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் பெகாசஸ் மென்பொருள் வழக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரவீந்திரன் குழுவின் அறிக்கை 3 பகுதிகளாக தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப குழுவின் அறிக்கையை சுப்ரீம் கோர்ட் ஆய்வு செய்தது. பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கையில், பெகாசஸ் உளவு தொடர்பான விசாரணைக்கு ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை.

அறிக்கையை பொதுவெளியில் வெளியிடாமல் ரகசியமாக வைக்க வேண்டும். இணைய பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும். சைபர் பாதுகாப்பை மேம்படுத்தும் முன், தனி நபர் பாதுகாப்பில் சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்’ என்றும் பரிந்துரை செய்துள்ளது. மேலும் ஆய்வு செய்யப்பட்ட 29 செல்போன்களில் 5 செல்போன்களில் உளவு பார்த்ததற்கான செயலி இருந்ததாகவும், ஆனால் அது பெகாசஸ் மென்பொருள் தானா என்பது உறுதியாக தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனைத்தொடர்ந்து “முழுமையான அறிக்கையை ஆய்வு செய்யாமல் மேலும் எந்தக் கருத்தையும் தெரிவிக்க நாங்கள் விரும்பவில்லை” என்று நீதிபதி ரமணா தெரிவித்தார். இந்த அறிக்கையை விரிவாக ஆராய்ந்த பிறகு கருத்து தெரிவிப்பதாக கூறிய நீதிபதிகள் வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.