பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே கிளாம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பெத்தநாயக்கன்பேட்டை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இங்கு 1 முதல் 5 வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர்.
தற்போது இந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையின் ஓடுகள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சுக்கள் உதிர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக்காலம் வந்துவிட்டால் மழைநீர் கசிந்து மாணவர்கள் அமர்ந்து படிக்க சிரமப்படுகின்றனர். எனவே பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கான்கிரீட் கட்டிடம் கட்ட வேண்டும் என்று பெத்தநாயக்கன்பேட்டை கிராம மக்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுசம்பந்தமாக மனுக்களும் கொடுத்துள்ளனர்.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ‘’இனிமேலாவது மாணவர்களின் நலன் கருதி பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய பள்ளி கட்டிடம் கட்டத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.