சென்னையை அடுத்த மதுரவாயலில் கடந்த 1ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் பங்கேற்றார். அதில், ‘ஸ்ரீரங்கம் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மத மோதலை துாண்டும் விதமாக பேசிய கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலர் குமரன் புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக, சென்னை சைபர் கிரைம் போலீசார், கலகம் செய்ய துாண்டுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ், கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட கனல் கண்ணன் தற்போது புழல் சிறையில் அடுக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமின் கோரி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், கனல் கண்ணன் தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கனல் கண்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பால்கனகராஜ், தம்முடைய பேச்சு நாட்டின் எந்த சட்டத்துக்கு எதிரானது அல்ல எனவும் இந்த சிலையை அகற்றக்கோரி, ஏற்கனவே பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகவும் கூறினார். சிலையை நிறுவிய நபர் மீது நடவடிக்கை எடுக்காமல், மனுதாரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் வாதத்தை முன்வைத்தார்.
சிலையை உடைக்கப் போவதாக கூறவில்லை என தெரிவித்த கனல் கண்ணன் தரப்பு வழக்கறிஞர் சிலையை அகற்ற வேண்டும் என்று தான் அரசுக்கு கோரிக்கை விடுத்தாக கூறினார். இது ஒன்றும் தீங்கானது அல்ல எனவும் எனவே, ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் ஜி.தேவராஜன், மனுதாரர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளதாகவும் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகிய மதங்கள் குறித்து பேசியுள்ளதாக குறிப்பிட்டார். கனல் கண்ணனின் பேச்சு இரு தரப்பினர் இடையே மத மோதல், பகைமை, மற்றும் வெறுப்பை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் பேசிய வீடியோவை, சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரின் விபரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளதால் கனல் கண்ணனுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என வாதிட்டார். கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்க மனுதாரரான தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்ட செயலாளர் குமரனின் வழக்கறிஞரும் எதிர்ப்பு தெரிவித்தார். பெரியார் கடவுள் மறுப்பை கடைசியாகத்தான் பேசினார். மனிதனை மனிதனாக மதிப்பதற்கு எதுவெல்லாம் தடையாக இருக்கிறதோ அதை எல்லாம் எதிர்த்தார் அவை எல்லாவற்றிர்கும் மூலம் கடவுள் ஆகவே கடவுளையும் எதிர்த்தார். தமிழ் நாடின் பெரும்பான்மையான மக்களான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக , பொருளாதார, கல்வி ,வேலைவாய்ப்பு மேப்பாட்டிற்கு காரணமாக இருந்தவர் தந்தை பெரியார்.
அவரது சிலையை உடைக்க வேண்டும் என்பது பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட ,மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டின் மீதான தாக்குதல். மேலும் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசியதோடு மட்டுமல்லாமல் பிறரையும் தூண்டும் வண்ணம் பேசியிருப்பது திட்டமிட்டே வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. வெறுப்பு பேச்சு தான் பல நாடுகளில் இனப்படுகொலைகள் ஏற்பட காரணமாக இருந்தது. ஆகவே கனல் கண்ணனுக்கு ஜாமின் வழங்குவது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று வாதிட்டார். இந்த வாதங்களை கேட்ட கேட்ட நீதிபதி எஸ்.அல்லி பிறப்பித்துள்ள உத்தரவில், விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாலும், ஜாமின் வழங்கினால் ஆதாரத்தை கலைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.