திமுக அமைப்பு செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர் எஸ் பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழக முதலமைச்சர் மூன்று நாள் பயணமாக கொங்கு மண்டலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிலையில், அவர் செல்லக்கூடிய இடங்களில் பொதுமக்கள் திரண்டு வரவேற்பு கொடுப்பதை பார்த்த எடப்பாடி பழனிசாமி வயிற்றெரிசச்சலுடன், பொய் மூட்டையாக நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளதாக குற்றம் சாட்டினார் . திமுக ஆட்சியில் நிர்வாகம் உட்பட அனைத்திலும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்
கடந்த தேர்தலில் அதிமுகவின் கோட்டையாக இருந்தது கோவை . தற்போது கோவை மக்கள் திமுக ஆட்சியை வியந்து பாராட்டி தவறு செய்ததை உணர்ந்து கோவை மண்டலத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை தந்துள்ளதாக தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டிய வெள்ளனூர் பேருந்து நிலையத்தை சுற்றி வேலுமணிக்கு சொந்தமான பினாமிகள் நிலம் வாங்கி முதலீடு செய்துள்ளதாகவும், அந்த இடம் பேருந்து நிலையம் அமைப்பதற்கு தகுதியான இடமாக இல்லை எனவும் கூறினார். 61 ஏக்கர் பேருந்து நிலையம் அமைக்க தேவைப்படுகிற நிலையில் 50 ஏக்கர் நிலத்தில் மட்டும் அவசரகதியாக அந்த பணிகள் கடந்த ஆட்சியில் நடைபெற்றதாக குற்றம் சாட்டினார்
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் 95 சதவீத பணிகள் நிறைவு அடைந்துள்ள நிலையில் அது பற்றி அறியாத எடப்பாடி பழனிச்சாமி குறை கூறியிருப்பதாகவும், அந்தத் திட்டம் இன்னும் இரண்டு மாதத்தில் செயல்பாட்டிற்கு வர இருப்பதாகவும் தெரிவித்தார். கோவையில் ஆச்சரியம் தரும் வகையில் அதிகமானோர் முதல்வருக்கு வரவேற்பு தந்ததை தாங்க முடியாமல் இல்லாது பொல்லாததை பேட்டியாக கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி என்றும் ஆர்எஸ் பாரதி தெரிவித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் ஆட்சி பறிபோகிற நேரத்தில் அவசரகதியாக அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என குற்றம்சாட்டினார். அந்த திட்டங்களில் எதையும் கைவிடாமல் அனைத்து திட்டங்களையும் திமுக தலைமையிலான அரசு செயல்படுத்தி வருவதாக கூறினார்.
கோவையில் புதிதாக பேருந்து நிலையம் அமைய உள்ள பகுதியில் திமுக குடும்பத்தினருக்கு சொந்தமான நிலம் இருப்பதாக கூறும் எடப்பாடி , நீதிமன்றம் சென்று அதை தடுக்கட்டும். அவரது குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் ஆட்சியையே கலைக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு , எனவே அதை நாங்கள் சந்திக்க தயார். முதலமைச்சரின் கோவை மாவட்ட சுற்றுப்பயணத்தில் 50 ஆயிரம் பேர் அதிமுகவில் இருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட பலர் விலகி திமுகவில் இணைந்துள்ளனர். ஆறு குட்டி போல் பல குட்டிகள் அதிமுகவில் இருந்து வெளிவந்து விட்டது. மேலும் பல குட்டிகள் வர தயாராக இருப்பதாகவும் எனவே எடப்பாடி பழனிச்சாமி தனது குட்டிகளை பாதுகாத்து கொள்ளட்டும் எனவும் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கைவிடப்பட்டது குறித்தும், சட்டம் ஒழுங்கு குறித்தும் அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தான் விவாதம் நடத்த தயாராக இருப்பதாகவும் சவால் விடுத்தார். தகுதி இல்லாத இடத்தில் வெள்ளலூர் பேருந்து நிலையம் கட்டுமான பணி நடைபெற்ற நிலையில் அதனை விளையாட்டு மைதானம் ஆக்கி மக்கள் பயன்பாட்டுக்கு கொடுப்போம் என தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து பேச அருகதை இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி. தனது ஆட்சியின்போது தன்னை ஆளாக்கிய ஜெயலலிதா அவர்களின் இல்லமான கொடநாட்டில் கொள்ளை மற்றும் கொலை போன்ற சம்பவங்கள் நடந்த நிலையில் அதனை தடுக்க தவறியவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. எனவே அவர் சட்டம் ஒழுங்கு குறித்து பேச தகுதி இல்லாதவர் என ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அமைக்கப்பட்டு அந்த குழுவின் அறிக்கையை பெறப்பட்டு நடக்க எடுக்கப்பட்டு வருவதாகவும், ரம்மி ஒரு திறன் வளர்ப்பு போட்டி என்று கடந்த காலங்களில் நீதிமன்றமே தெரிவித்துள்ள நிலையில் இந்த ஆன்லைன் ரம்மி போட்டியை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் இதற்கு பாராளுமன்றத்தில் தான் சட்டம் இயற்ற முடியும். அதற்கான நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டு வருவதாகவும் ஆர்எஸ்.பாரதி கூறினார்.