மக்கள் உணர்வை புரிந்து சேவையாற்ற வேண்டும்: ஐஏஎஸ்.களுக்கு முர்மு அறிவுரை

புதுடெல்லி: ‘மக்களின் உணர்வுகளை புரிந்து சேவை செய்ய வேண்டும்,’ என்று இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுரை வழங்கினார். ஒன்றிய அமைச்சகத்தின் பல்வேறு துறைகளில் உதவி செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள, 2020ம் ஆண்டின் 175 ஐஏஎஸ் அதிகாரிகள், ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேற்று சந்தித்தனர். அவர்களடையே முர்மு பேசியதாவது: அரசின் நலத் திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் குறித்து எதுவுமே தெரியாதவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தங்களின் துறையில் நாட்டை முதலாவது இடத்துக்கு கொண்டு வரும் ஆர்வத்துடன் பணியாற்ற வேண்டும். ஏழை மக்களின் வாழ்க்கையை மாற்றி காட்ட முடியும் என்று பெருமை கொள்ள வேண்டும். மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களுக்காக சேவை செய்ய வேண்டும். சமுதாயத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஏழைகளை அரசின் நலத்திட்டங்கள் சென்றடைந்தால் மட்டுமே அத்திட்டம் வெற்றி பெற்றதாகும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும். ஆதரவற்ற மக்களுக்கு உதவுவதில், ஒரு போதும் தயங்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

* நல்லாசிரியர்களுக்கு செப்.5ம் தேதி விருது
இந்தாண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்காக, நாடு முழுவதும் 46 ஆசிரியர்கள் தேர்வாகி உள்ளனர். இவர்களில் ராமநாதபுரத்தில் உள்ள கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர்  ராமசந்திரன், புதுச்சேரி ஆசிரியர் அரவிந்த ராஜா ஆகியோரும் அடங்குவர். டெல்லி விக்யான் பவனில் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் இவர்களுக்கு ஜனாதிபதி முர்மு விருதுகளை வழங்குகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.