கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கடலோர மீனவ கிராமம் மடவாமேடு. இந்த கிராமத்திலிருந்து தினமும் பைபர் படகுகள் மூலம் மட்டுமே மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். சுமார் 500 மீனவர்களின் குடும்பங்கள் இங்கு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும் 350 பைபர் படகுகள் மூலம் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். மடவாமேடு கிராமத்தில் கடலில் பிடிக்கப்படும் மீன்களை வெளியூர்களிலிருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர். சில்லறை விற்பனையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது மடவாமேடு மீனவர்களுக்கு வலையில் வழக்கத்தை விட அதிக அளவு சூரை மீன்கள் கிடைத்து வருகின்றன. உடலை வலுவாக்கவும், ரத்த ஓட்டத்தை சீராக்கவும்,எதிர்ப்பு சக்தி, கூர்மையான கண்பார்வை உள்ளிட்ட பயன் இந்த மீன் உண்பதன் மூலம் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. சூரை மீன் சாப்பிடுவதால் சூரரைப் போல் வீரமாக வாழலாம் என்றும் சொல்கின்றனர். அப்படி சிறப்பு வாய்ந்த இந்த சூரை மீன் தற்போது வழக்கத்தை விட மடவாமேடு கடலில் அதிகமாக கிடைத்தாலும் விலை போகவில்லை. அதே நேரத்தில் இப்பகுதியில் வவ்வால் மீன் மிகக் குறைந்த அளவே கிடைக்கிறது.இந்த மீன் கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் அதிக அளவில் கிடைத்து வரும் சூரை மீன்கள் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.75 வரை மட்டுமே விலை போகிறது. ஒரு நாளைக்கு மடவாமேடு கடலில் மட்டும் இரண்டு அல்லது மூன்று டன் வீதம் சூரை மீன்கள் கிடைத்தாலும், அதிக விலை போகாததால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். சென்ற ஆண்டு சூரை மீன் கிலோ ரூ.150 மற்றும் அதற்கு மேலும் விற்பனையானது. இந்த ஆண்டு மிகக் குறைந்து விலைக்கு விற்பனையாகிறது என்று மடவாமேடு மீனவர்கள் தெரிவித்தனர்.