பள்ளி சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஊரணியில், தற்போது மீன்களும் இறந்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நண்பர்களுடன் ஊரணி ஒன்றில் குளிக்கச் சென்ற பள்ளி சிறுவன் சையது மைதீன், ஊரணி கரையிலேயே செத்து மிதந்ததுள்ளார். இந்நிலையில் அதே குளத்தில் இரண்டு நாட்களுக்கு பின்னர் குளத்திலிருந்த அனைத்து மீன்களும் செத்து மிதந்து இருக்கின்றன. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர் உத்தங்குடி அருகே பழமையான ஊரணி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஊரணியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளிச் சிறுவன் குளிக்கும்போது மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில் இன்று அதே குளத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டு நீரை பரிசோதனை செய்தனர்.
இந்நிலையில் ஊரணியில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஊரணியில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் குளித்து விடாமல் இருக்க மாநகராட்சி ஊழியர்கள் மூலம் பாதுகாப்பு பணி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM