நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை பாதரை செட்டுக்காரன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் (36). இவருக்கு திவ்யபாரதி (29) என்ற மனைவி இருக்கிறார். கௌதம் வெப்படையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். அதோடு, கௌதம் அவர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவராகவும் உள்ளார். இதனால், அந்தப் பகுதியில் கௌதம் பலராலும் நன்கு அறியப்படும் நபராக இருந்தார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இரவு நேரத்தில், கௌதம் தனது நிதி நிறுவனத்தை பூட்டி விட்டு பாதரையில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் அருகே இருட்டான பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர், கௌதம் கண்களில் மிளகாய்பொடியைத் தூவி, தாங்கள் வந்த காரில் அவரைக் கடத்தி சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால், அதிர்ச்சியான கௌதமின் உறவினர்கள், கௌதம் கடத்தப்பட்டது குறித்து, பள்ளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த பள்ளிப்பாளையம் காவல் நிலைய போலீஸார், சி.சி.டி.வி காட்சிகளை வைத்து தீவிர விசாரணையை தொடங்கினர். அதோடு, கௌதமை கடத்திய கும்பலைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் பணியை முடுக்கிவிட்டனர்.
அதோடு, கௌதமை கடத்திய நேரத்தில் செல்போன் கோபுரத்தில் இருந்து வெளியான செல்போன் அழைப்பு உள்ளிட்ட விபரங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களிடம் கேட்டு அறிந்தனர். அதைக்கொண்டு, கௌதமை கடத்திய கும்பலை போலீஸார் தீவிரமாக தேடும் முயற்சியில் இறங்கினர். இந்நிலையில், கடத்தப்பட்ட நிதி நிறுவன அதிபர் கௌதம், சேலம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் ஏரிக்கரையில் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த சடலத்தை மீட்டு, பள்ளிப்பாளையம் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கௌதமைக் கடத்தி கொலை செய்த கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி வெப்படை பகுதியில் கடைகள் அடைத்து பேராட்டம் நடத்தி வருகின்றனர். மறுபக்கம், கட்சிரீதியான பகையில் ஏற்பட்ட கொலையா, நிதி நிறுவனம் நடத்தி வந்ததால், கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் நடந்த கொலையா, அல்லது வேறு ஏதும் காரணமா என்று பல கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.