மும்பை: மும்பையில் உறியடி நிகழ்ச்சியில் மனித கோபுரத்தில் இருந்து தவறிவிழுந்து காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உறியடி நிகழ்ச்சி நடத்துவது நாட்டில் வழக்கமாக உள்ளது. மகாராஷ்டிராவில் ‘தகி ஹண்டி’ என்ற பெயரில் உறியடி விழா கொண்டாடப்படுகிறது. அதிக உயரத்தில் உறியில் கட்டப்பட்டுள்ள பானையை உடைப்பதற்காக இளைஞர்கள் மனித கோபுரம் அமைத்து மேலே செல்வார்கள். இந்நிலையில் மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடந்த உறியடி விழா ஒன்றில் சந்தேஷ் தல்வி (24) என்ற இளைஞர் மனித கோபுரத்தில் இருந்து தவறி விழுந்தார். ‘சிவ சம்போ கோவிந்த பதக்’ என்ற குழுவை சேர்ந்த சந்தேஷ் தல்விக்கு இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு உயர் சிகிச்சைக்காக நானாவதி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.
இந்நிலையில் சந்தேஷ் தல்வி சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை இரவு உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.