கம்பம்: சுருளி அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மூன்று வாரங்களாக நீடிப்பதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தேனி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலம் சுருளி அருவியாகும். சுருளி அருவிக்கு தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு ஊர்களிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகின்றனர். இந்நிலையில் கேரளா மற்றும் கேரளாவையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப்பகுதிகளான தேனி மாவட்டத்தின் கம்பம், கூடலூர், பாளையம் மற்றும் சின்னமனுரில் தென்மேற்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது.
சின்னமனூரை ஒட்டியுள்ள மேகமலை, தூவானம் அணை, அரிசிப்பாறை, மற்றும் ஈத்தகாடு வனப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இப்பகுதியில் பெய்யக்கூடிய மழையால் ஓடைகளில் அதிக அளவில் சேரும் தண்ணீர் சுருளி அருவிக்கு வந்து சேர்கிறது. இதனால் சுருளி அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கடந்த 2ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் சுருளி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் அருவில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து அதிகம் இருப்பதால் பொதுமக்கள் குளிப்பதற்கான தடை மூன்று வாரங்களை கடந்தும் நீடிக்கிறது. இதனால் அருவி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் வரவேண்டாம் என கம்பம் கிழக்கு வனச்சரக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.