வதோதரா: குஜராத்தில் ரயில்வேயில் டி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த 22ம் தேதி நடைபெற்றது. வதோராவின் லஷ்மிபுரா பகுதியில் உள்ள தேர்வு மையத்தில் 600 பேர் பங்கேற்றனர். இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கு மணீஷ் குமார் என்பவர் விண்ணப்பித்து இருந்தார். ஆனால், தனது நண்பன் ராஜ்யகுரு குப்தாவை தனக்கு பதில் தேர்வு எழுதும்படி அவர் கேட்டுக் கொண்டார். இதற்கு சம்மதித்த ராஜ்யகுருவும் தேர்வுக்கு தயாராகி உள்ளார். தேர்வு மையத்தில் பயோமெட்ரிக் முறையில் சோதனை நடத்தப்படும் என்பதால், முதல் நாள் தனது இடது கட்டை விரலை சூடான தோசை கல்லில் மணீஷ் குமார் வைத்துள்ளார்.
இதனால் விரலில் கொப்பளம் எழுந்ததும், பிளேடு வைத்து அந்த தோலை வெட்டி எடுத்தார். அதை தனது நண்பன் ராஜ்யகுருவின் கட்டை விரலில், மெல்லிய பிளாஸ்டரை போட்டு ஒட்டினார். தேர்வு மையத்திற்கு சென்ற ராஜய்குருவின் கையில், தேர்வு மைய கண்காணிப்பாளர் சானிடைசரை தெளித்துள்ளார். சானிடைசரை கையில் தெளித்தவுடன் அவர் அணிந்திருந்த பிளாஸ்டர் பிரிந்து, கட்டை விரல் தோலும் கீழே விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தேர்வு மைய கண்காணிப்பாளர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்த போலீசார், ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்த ராஜ்யகுரு கைது செய்தனர். பின்னர், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மணீஷ் குமாரும் கைது செய்யப்பட்டார்.