விருதுநகர்: வழக்கு விசாரணைக்காக வந்தவர்கள்… பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!

அருப்புக்கோட்டை அருகே வசிக்கும் 40 வயது பெண் ஒருவர் தனது உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக விருதுநகர் சென்றுவிட்டு மீண்டும் பஸ்ஸில் ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருக்கு, நன்கு அறிமுகமான கரிசல்குளத்தை சேர்ந்த முத்துச்செல்வம் என்பவர், பெண்ணை தொடர்புக்கொண்டு பேசியுள்ளார். அப்போது பேசியவர், தானே காரில் கூட்டிச்சென்று இறக்கிவிடுவதாக கூறியுள்ளார். இதையடுத்து பாலவநத்தம் அருகே பஸ்ஸிலிருந்து இறங்கிய பெண், முத்துச்செல்வத்துடன் காரில் புறப்பட்டுள்ளார். அவர்கள் அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம்-கோபாலபுரம் சாலையில் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது, முத்துச்செல்வத்தை பின்தொடர்ந்து பைக் மற்றும் காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கிவிட்டு அந்தப் பெண்ணை மறைவான இடத்திற்கு கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. மேலும் அந்தப் பெண் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகள், பணம், செல்போன் உள்ளிட்டவைகளையும் பறித்துக்கொண்டு அவரை அருப்புக்கோட்டை தாலுகாவில் இறக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

காவல் நிலையம்

இந்தநிலையில், சாலையோரம் காயமடைந்து கிடந்த முத்துச்செல்வத்தை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதேவேளையில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 341, 354b, 366, 376d, 397, 506ii ஆகிய வழக்குப்பிரிவின் கீழ் அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராமானுஜபுரம் பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படியான அடையாளங்களுடன் வந்த கார் மற்றும் பைக்கில் வந்தவர்களை மடக்கிப்பிடித்து விசாரித்தில் அவர்கள்தான் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் என தெரியவந்தது. இதனையடுத்து, கார் மற்றும் பைக்கை பறிமுதல் செய்த போலீஸார் அவர்களை தாலுகா காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். போலீஸாரின் விசாரணையில் அவர்கள் கோவிலாங்குளத்தைச் சேர்ந்த சீனிவாசன்(42), பேரையூர் அருகே வெங்கடாசலபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (23), ராம்குமார்(20), அழகுராஜ்(19), அல்லம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதில் சீனிவாசன் ஓய்வுப்பெற்ற ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது

சீனிவாசனும் அவரின் கூட்டாளிகளான வெங்கடாசலபுரத்தை சேர்ந்த பிரபாகரன், அவருடைய தம்பி விஜய் ஆகிய 3 பேரும் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். இவர்களுடன் ஜெயக்குமார், ராம்குமார், அழகுராஜ், 17 வயது சிறுவன் ஆகியோரும் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கோபாலபுரம் சாலை வழியே வரும்போது, அங்கு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்த முத்துச்செல்வத்தை தாக்கிவிட்டு, பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை இழைத்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சீனிவாசன், ஜெயக்குமார், ராம்குமார், அழகுராஜ் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று சிறையில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவனை சிறுவர் காப்பகத்தில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பிரபாகரன் மற்றும் அவரின் தம்பி விஜய்யை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். அருப்புக்கோட்டை அருகே பெண்ணை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.