புதுடெல்லி: கோதுமை மாவு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதன் ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. உலகளவில் ரஷ்யா, உக்ரைன் கோதுமை ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ளன. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையேயான போரினால் சர்வதேச சந்தையில் கோதுமை விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய கோதுமையின் தேவை அதிகரித்தது. இது நாட்டில் கோதுமை மாவு விலையில் மறைமுக பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில், கோதுமை மாவு விலை உயர்வை கட்டுக்குள் வைப்பதற்காக அதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோதுமை மாவு ஏற்றுமதிக்கு தடை விதிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன் மூலம், கோதுமை மாவு விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டு ஏழை மக்களின் உணவுப் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது.