செய்யூர்: இயற்கை விவசாயம் மற்றும் மறு உருவாக்க சாகுபடியில் சாதனைகள் கண்ட தமிழக விவசாயிகள் 9 பேருக்கு கிசான் பிரகதி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்திய வேளாண் துறையில் இயற்கை விவசாயம மற்றும் மறு உருவாக்க சாகுபடி செய்வது என்பது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை நடைமுறைபடுத்த அவுட்க்ரோ என்ற தொண்டு நிறுவனம் விவசாயிகளுக்கு ஊக்கமும் வழிமுறைகளையும் அளித்து வந்தது. இந்நிலையில், இயற்கை விவசாயம் மற்றும் மறு உருவாக்க சாகுபடி பணியில் புதுமையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்திய தமிழ்நாட்டை சேர்ந்த 9 சிறந்த விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு அவுட்க்ரோ தொண்டு நிறுவனம் சார்பில் கிசான் பிரகதி என்ற விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி செய்யூர் அடுத்த இல்லீடு பகுதியில் அமைந்துள்ள ஊரக மேலாண்மைகான தேசிய அக்ரோ பவுண்டேஷன் நிறுவனத்தில் நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் தொழில் முன்னேற்ற இயக்கத்தின் தலைமை செயலாக்க அதிகாரி ஞானசம்பந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். மேலும், இந்த வேளாண் துறையில் சிறப்பாக பணியாற்றிய வேளாண் தொழில் முனைவோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, அவுட்க்ரோ மூலம் விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள செயலியை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற விவசாயிகளுக்கும் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், அந்த செயலி மூலம் விவசாயிகள், விவசாயம் சம்பந்தமான சந்தேகங்களை கேட்டறிவதோடு வேளாண் பணிகள் மேற்கொண்டு பயனடைய வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டனர்.