ஷாக்.. அப்பா, அம்மாவுக்கு விஷம் கலந்த டீ கொடுத்த மகள்.. தாய் மரணம்.. பேப்பர் படித்ததால் தப்பிய தந்தை

திருச்சூர்: அடமானத்தில் இருந்த நகைகளை மீட்க பணம் தேவைப்பட்டதால் தனது தாயை விஷம் வைத்து கொலை செய்த மகளை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கீழூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (65). இவரது மனைவி ருக்மணி (57). இவர்களுக்கு இந்திரலேகா (24) என்ற ஒரே மகள் உள்ளார். இந்துலேகாவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவரது கணவர் சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். சிறு வயதில் இருந்தே ஆடம்பர வாழ்ககை மீது நாட்டம் கொண்டவரான இந்துலேகா, திருமணத்துக்காக தனது பெற்றோர் போட்ட நகைகள் மற்றும் கணவர் வாங்கிக் கொடுத்த நகைகளை அவ்வப்போது அடமானம் வைத்து தோழிகளுடன் சினிமா, ஹோட்டல் என ஜாலியாக பொழுதை கழித்து வந்துள்ளார்.

நகைகள் அடமானம்

ஒருகட்டத்தில் தன்னிடம் இருந்த 50 பவுன் நகைகளையும் அவர் அடமானம் வைத்துவிட்டார். இந்த சூழலில், கடந்த 18-ம் தேதி இரண்டு வார விடுமுறைக்காக இந்துலேகாவின் கணவர் கேரளா வந்துள்ளார். அப்போது வீட்டில் எந்த நகைகளையும் இல்லாததை கண்ட அவர், இந்துலேகாவிடம் இதுகுறித்து விசாரித்துள்ளார். அதற்கு இந்துலேகா, நடந்த விஷயங்களை அப்படியே கணவரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர், இன்னும் ஒரு வாரத்துக்குள் நகைகள் வீட்டில் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் நடப்பதே வேறு என கண்டிப்புடன் கூறியிருக்கிறார். இதனால் பயந்து போன இந்துலேகா, பல லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்த நகைகளை எப்படி மீட்பது என யோசித்துள்ளார். அப்போதுதான், தனது தந்தைக்கு சொந்தமாக திருச்சூரில் 14 சென்ட் நிலம் இருப்பது இந்துலேகாவுக்கு நினைவுக்கு வந்தது. ஆனால், தந்தையிடம் கேட்டால் உடனே அந்த நிலத்தை தனக்கு எழுதிக் கொடுத்துவிட மாட்டார் என்பது அவருக்கு தெரியும்.

 நிலம் மீது ஆசை

நிலம் மீது ஆசை

இதனால் வேறு வழியில்லாமல் தந்தையையும், தாயையும் கொன்றுவிடலாம் என்ற முடிவுக்கு இந்துலேகா வந்துள்ளார். போலீஸாருக்கு சந்தேகம் வராமல் எப்படி கொலை செய்வது என இரவு பகலாக அவர் யோசித்துள்ளார். இணையதளத்திலும் இதுதொடர்பாக தேடிப் பார்த்துள்ளார். அப்போதுதான், விஷம் வைத்து பெற்றோரை கொலை செய்யும் யோசனை அவருக்கு வந்துள்ளது.

தேனீரில் விஷம்

தேனீரில் விஷம்

அதன்படி, நேற்று காலை வழக்கம் போல தனது தாய், தந்தைக்கு இந்துலேகா விஷம் கலந்த, டீ கொடுத்துள்ளார். அதனை அவரது தாய் ருக்மணி உடனே குடித்துவிட்டார். தந்தை சந்திரன் நாளிதழ் படித்துக் கொண்டிருந்ததால் டீயை மேஜையில் வைத்திருந்தார். அப்போது திடீரென ருக்மணிக்கு தலை சுற்றலும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த சந்திரன், டீயை முகர்ந்து பார்த்துள்ளார். அதில் வேறுவிதமான வாசனை வந்ததால் டீயை குடிக்காமல் உடனடியாக மனைவி ருக்மணியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இந்துலேகாவும் உடன் சென்றிருக்கிறார்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

மருத்துவப் பரிசோதனையில், அவரது உடலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் ருக்மணி அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் அவர் இறந்து போனார். இதனைத் தொடர்ந்து, போலீஸாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு வந்த மருத்துவர்கள், மகள் இந்துலேகாவிடம் விசாரணை மேற்கொண்டனர். முதலில் தனக்கு ஒன்றும் தெரியாது என நடித்த அவர், பின்னர் டீயில் விஷம் கலந்ததை அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் போலீஸார் இந்துலேகாவை கைது செய்தனர். ஆடம்பர வாழ்க்கைக்காக நகைகளை அடமானம் வைத்து, அந்த நகைகளை மீட்பதற்காக தனது சொந்த தாயையே மகள் கொன்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.