தமிழக முதல்வர் மு.க.ஸடாலின் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த போன்கால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விசாரணை நடத்தியதில் இந்த தகவல் புரளி என்று தெரியவந்துள்ளது.
சமீப காலமாக பிரபலங்கள் வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன்கால் வருவதும், இந்த தகவலை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையில் முடிவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவல் புரளி என்று தெரியவந்ததும் போன் செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்மநபர் ஒருவர் முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்களுடன் இணைந்து முதல்வரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவல் பொய்யானது என்று தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காவல்கட்டப்பாட்டு அறைக்கு வந்த போன் நம்பரை வைத்து விசாரணை நடத்தியதில், ஷனாய் நகரில் உள்ள ஒருவரின் செல்போன் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தது புவனேஷ் என்ற சிறுவன் என்பது தெரியவந்தது.
மனநலம் பாதிக்கப்பட்டு, சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வரும் நிலையில், அங்கு பணியாற்றும் அன்பழகன் என்பரின் செல்போனை எடுத்து அவருக்கே தெரியாமல் காவல்கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தது தெரியவந்தது.
மேலும் சிறுவன் புவனேஷ் இதேபோல் பலமுறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் அவர் மீது காவல்நிலையங்களில் 9-க்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil