ஆரம்பத்தில் நீராவி எஞ்சினில் இயங்கி வந்த ரயில்கள் தற்போது மின்சாரம் மற்றும் டீசலில் இயங்கி வருகின்றன என்பது தெரிந்ததே.
டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை அடுத்து இந்தியா உள்பட பல நாடுகளில் தற்போது பெரும்பாலும் மின்சாரத்தால் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜெர்மனியில் ஹைட்ரஜனில் இயங்கும் பயணிகள் ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய பசுமைப் புரட்சி செய்யலாம் என ஜெர்மனி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஹைட்ரஜன் ரயில்
ஜெர்மனியில் தற்போது இயக்கப்பட்டு வரும் டீசல் ரயில்களுக்கு பதிலாக ஹைட்ரஜனில் இயங்கும் பயணிகள் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, ரயில்களை இயக்கும் செலவும் மிகப்பெரிய அளவில் குறையும் என்றும் ஜெர்மனி ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
14 ரயில்கள்
ஜெர்மனியில் முதல்கட்டமாக 14 பயணிகள் ரயில்கள் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்க எஞ்சின்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் நிலக்கரி, டீசல் உள்ளிட்ட புதைபடிவ பொருள்களுக்கு மாற்றாக ஒரு புதிய பசுமைப்புரட்சி ஏற்படுத்தி உள்ளதாகவும், ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.
பசுமை திட்டம்
93 மில்லியன் யூரோ பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹைட்ரஜன் ரயில் திட்டம் நாட்டை பசுமையாக்குவதோடு, நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் இருக்கும் என்றும் நாட்டை மாசு காற்றில் இருந்து பாதுகாக்கும் முயற்சிகளுக்கு ஒரு சிறந்த உதாரணம் என்றும் ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.
டீசல் சேமிப்பு
புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜனை பயன்படுத்தி ரயில்களை இயக்குவதன் மூலம் ரயில்கள் ஆண்டுக்கு 1.6 மில்லியன் லிட்டர் டீசல் எரிபொருளை சேமிக்கலாம் என்று ஜெர்மன் அரசு தெரிவித்துள்ளது.
ஹைட்ரஜன் தயாரிப்பு
ஜெர்மன் சிறப்பு எரிவாயு நிறுவனமான லிண்டே மூன்று ஆண்டுகளுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை தரும் ஹைட்ரஜனை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் உள்நாட்டில் உள்ள அனைத்து பயணிகள் ரயில்களையும் இயக்கலாம் என்றும் ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.
Fleet of hydrogen passenger trains begins service in Germany
Fleet of hydrogen passenger trains begins service in Germany | ஹைட்ரஜனில் இயங்கும் பயணிகள் ரயில்.. புதிய புரட்சி செய்யும் ஜெர்மனி!