புதுடெல்லி: கரோனா தொடர்பான வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு தகவல்கள் 25,000 கோடி முறை பார்க்கப்பட்டதற்காக இந்திய தகவல் பணி (ஐஐஎஸ்) அதிகாரிகளுக்கு யூடியூப் பாராட்டு தெரிவித்துள்ளது.
சர்வதேச ஆய்வுகளின்படி, மனித குலத்தில் நூற்றாண்டுக்கு ஒருமுறை தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன. இதில் ஒருவகையான ‘கோவிட்-19’ எனும் கரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதிலும் பரவியது. அப்போது கரோனா தொடர்பான தவறான தகவல்களும் மக்கள் மத்தியில் பரவின. இதைத் தடுக்க மத்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் தற்போதும் தொடர்கின்றன.
இந்தியா முழுவதிலும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மக்களுக்கு தயக்கம் உருவானதால் இதைப் போக்க வேண்டிய தேவையும் மத்திய அரசுக்கு இருந்தது. இப்பணியில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தகவல் தொடர்பு அதிகாரிகள் இறங்கினர். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் ஐஐஎஸ் அதிகாரிகள் தலைமையில் இக்குழு பணியாற்றியது.
இதில், மனிஷா வர்மா, அங்கூர் லஹோட்டி மற்றும் அரோஹி படேல் தலைமையிலான ஐஐஎஸ் அதிகாரிகள் குழுக்கள் பணியில் ஈடுபட்டிருந்தன. இவர்களை, யூடியூபின் ஆசிய பசிபிக் பிராந்திய இயக்குநர் அஜய் வித்யாசாகர் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார்.
அதிகாரிகளை பாராட்டுகிறேன்
இத்துடன் அஜய் வித்யாசாகர் அனுப்பியுள்ள கடிதத்தில், “வெற்றிகரமான கோவிட்-19 தகவல் தொடர்பு ஒத்துழைப்புக்காக சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செய்தித் தகவல்அலுவலகத்தில் பணியாற்றும் இந்திய தகவல் பணி அதிகாரிகளைப் பாராட்டுகிறேன். இந்த மத்தியக்குழு, கூகுளுடன் நான்கு முனைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்தியது. இதனால் 25,000 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
குறும்பட வீடியோக்கள்
பாராட்டை பெற்ற ஐஐஎஸ் அதிகாரிகள் குழுக்களால், மத்திய அமைச்சகங்களின் செய்தியாளர் சந்திப்புகள், யூடியூப் தளத்தில் நேரலையில் நடத்தப்பட்டன. கரோனா தொடர்பான முக்கிய வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் இணைந்து குறும்பட வீடியோக்களும் யூடியூபில் பதிவேற்றப்பட்டன.
கூகுள் வரைபடத்தில் கரோனாதடுப்பூசி மையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. இதன் மூலம் கரோனா தடுப்பூசி மையங்களை மக்களால் எளிதாக அணுக முடிந்தது.
கரோனா தொடர்பான பயணஆலோசனைகள், நெறிமுறைகள் போன்றவற்றை மத்திய பத்திரிகைதகவல் மையத்தின் இணையதளத்தில் பதிவேற்றினர். யூடியூப் அதை தாமாகவே தேர்ந்தெடுத்து பிராந்திய மொழிகளில் பரவச் செய்ய முடிந்தது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக குழுவால் உருவாக்கப்பட்ட சிறப்பு வீடியோக்கள், அமைச்சகத்தின் சமூகவலைதளக் கணக்குகளிலும் பதிவேற்றம் செய்யப்பட்டன, யூடியூபின் அதிகாரப்பூர்வ சேனல் மூலம் இது பரவச் செய்யப்பட்டது.
இந்த வீடியோக்கள், கரோனா தகவல் தொடர்புக்காக யூடியூப் உருவாக்கிய சிறப்பு சேனலில் பதிவேற்றப்பட்டு, பரந்த அளவில் பார்வையாளர்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
யூடியூபில் 25,000 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது பாராட்டை பெற்றுள்ளது. உலக நாடுகளில் அரசின் வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு தகவல்கள் யூடியூபில் 25,000 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.