லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் வெயிலில் அதிகம் நேரம் இருந்ததால் அவரது முகத்தில் உள்ள சருமம் பிளாஸ்டிக் உருகியது போன்று மாறியது. காண்பவரை கலங்க வைத்தது.
25 வயதாகும் சிரின் முரத், லண்டனில் வசித்து வருகிறார். இவர் தனது விடுமுறை நாள்களைக் கழிப்பதற்கு குடும்பத்துடன் பல்கேரியாவுக்குச் சென்றுள்ளார்.
பல்கேரியாவிலுள்ள சன்னி கடற்கரையில் சுமார் 21 செல்சியஸ் வெயிலில் இளைப்பாறியுள்ளார், அப்படியே சற்று தூங்கி விட்டார். தூக்கத்திலிருந்து விழித்தபோது அவர் முகம் சிவந்திருந்தது. அது வலியைத் தரும் என்று அவர் நினைக்கவில்லை. அதனால் கண்டுகொள்ளாமல் விடுமுறையைக் கழிப்பதில் அவர் கவனத்தை செலுத்தினார்.
மறுநாள், அவரது முகம் மாறியிருந்ததை அறிந்தார். நெற்றிப்பகுதி பிளாஸ்டிக் உருகியது போன்ற நிலையில் மாற்றம் அடைந்திருப்பதை பார்த்தார். இதற்காக, எந்த மருத்துவ உதவியையும் நாட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார்.
அடுத்த நாளே பிளாஸ்டிக் போன்று தோல் உரியத் தொடங்கியுள்ளது. அவரது முகம் இளஞ்சிவப்பு நிறத்திலும், தோல் உரிந்த திட்டுகளுடனும் காணப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து சிரின் கூறும்போது, “அந்தத் தோலை தொடும்போது வலியை உணர்ந்தேன், அதற்கு அடுத்த நாள் அதிக வலியை உணர்ந்தேன். தோல் உரியத் தொடங்கிய பிறகு வலியிலிருந்து நிவாரணம் கிடைத்தது. தோல் உரிந்த பிறகு வலியும் தெரியவில்லை. நன்றாக இருப்பதை உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சிரின், ”உங்கள் சருமம் நன்றாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தாலும் சன் ஸ்கிரீமை பயன்படுத்துங்கள். நான் எப்போதும் அதைப் பயன்படுத்துவேன். ஆனால் அன்று மறந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆன நிலையில் தற்போது அவரது சருமத்தில் பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் சில புள்ளிகள் மட்டுமே காணப்படுகின்றனவாம்.