34 பள்ளிகள்… ஒருத்தரு கூட பாஸ் ஆகல… மொத்தமா மூட அரசு திடீர் முடிவு!

அசாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளின் நிலை மோசமாக சென்று கொண்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்மாநிலத்தில் நடந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியானதில் தேர்ச்சி சதவீதம் 56.49 சதவீதம் என்று தெரியவந்தது. இது 2018ஆம் ஆண்டிற்கு பின்னர் கிடைத்துள்ள மிகவும் குறைவாக சதவீதம் ஆகும். அதிலும் 34 பள்ளிகளை சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது மாநில அரசுக்கே பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

மேலும் 68 பள்ளிகளில் வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் பூஜ்ஜியம் தேர்ச்சி சதவீதம் அடைந்த 34 பள்ளிகளை நிரந்தரமாக மூடும் முடிவிற்கு அசாம் மாநில அரசு எடுத்துள்ளது. இதுகுறித்து மாநில கல்வித்துறை அமைச்சர் ரனோஜ் பெங்கு கூறுகையில், பள்ளிகளின் முதன்மையான பணி என்பது போதிய கல்வியை அளிப்பது தான். அதை பள்ளிகள் உறுதி செய்யாவிடில் எப்படி மாணவர்கள் தேர்ச்சி பெறுவர்.

இந்த சூழலில் பள்ளிகளை நடத்துவதில் அர்த்தமே இல்லை. பூஜ்ஜியம் தேர்ச்சி சதவீதத்துடன் மக்கள் வரிப்பணத்தை வீணாக்கி பள்ளிகளை நடத்த அரசு விரும்பவில்லை என்று கோபத்துடன் கூறியிருக்கிறார். எனவே 34 பள்ளிகளை மூடினால் அங்கு படிக்கும் மாணவர்களை எங்கு சேர்ப்பது? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பதிலளித்துள்ள கல்வித்துறை அதிகாரிகள், பூஜ்ஜியம் தேர்ச்சி சதவீதம் கொண்ட பள்ளிகளை மூடுவது என முடிவெடுக்கப்பட்டு விட்டது.

அங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்க வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிவித்தனர். அசாம் மாநிலத்தில் கல்விச் சூழல் இப்படியொரு நிலைக்கு தள்ளப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் சரியான முறையில் கற்க முடியவில்லை.

நிறைய பள்ளிகள் ஆசிரியர்கள் 100 சதவீத வருகைப் பதிவை உறுதி செய்யவில்லை. கடந்த ஆண்டு கொரோனாவை காரணமாக முன்வைத்து மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் அளிக்கப்பட்டன. அதன்பிறகு தேர்விற்கும், மாணவர்களுக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுவிட்டது. ஆகையால் நடப்பாண்டு பொதுத்தேர்வு என்பது பெரும் சுமையாக மாறிப் போனது.

அதற்காக கல்விச் சூழலை மேம்படுத்த வேண்டுமே தவிர, பள்ளிகளை மூடுவது எப்படி சரியாகும் என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் ஐஐடி கவுகாத்தி பேராசிரியர்கள் உதவியுடன் அரசுப் பள்ளிகளில் மிகவும் பின்தங்கி செயல்படும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.