பாரத் சன்சார் நிகம் லிமிட்டெட் நிறுவனம் இன்னும் சில நாட்களில் 4G சேவையை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள காவல்துறையினருக்காக புதிய அதிரடி சலுகை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் ரீச்சார்ஜ் தளத்திற்கு சென்று தமிழகத்திற்கான ரீச்சார்ஜ் திட்டங்களின் கீழ் தேடினால் இது கிடைக்கும்.
திட்டத்தின் பலன்கள் என்னென்ன?
Bsnl அறிவித்துள்ள இந்த ரீச்சார்ஜ் திட்டமானது சிறப்பு சலுகையாக தமிழக காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்காக பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ளது.இதன்படி ரூபாய் 321 செலுத்தி ரீச்சார்ஜ் செய்தால் அதன் பலன்கள் ஒரு வருடத்திற்கு நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அதில் முதல் சிறப்பம்சமே ஒரு வருடத்திற்கு உங்கள் சிம் ஆக்ட்டிவாகவே இருக்கும். ஆனால் மற்ற நிறுவனங்களின் சிம்களை குறிப்பிட்ட நாளுக்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் சிம் முடக்கப்பட்டு இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியாதவாறு ஆகிவிடும்.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் சிறப்பம்சமாக இரு காவலர்களுக்கு இடையில் அழைப்புகள் மேற்கொண்டால் அது இலவசம். வேறு யாருக்காவது அழைப்பு கொடுத்தால் உள்ளூர் அழைப்புகளுக்கு ஒரு நிமிடத்திற்கு 7 பைசாவும், STD அழைப்புகளுக்கு 15 பைசாவும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
அதே போல் ஒரு மாதத்திற்கு 250 நார்மல் மெசேஜ்கள் அனுப்பி கொள்ளலாம். ஒரு மாதத்திற்கு 15GB டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும் bsnl சிம்களுக்கு ரோமிங் கட்டணம் கிடையாது என்பது கூடுதல் சிறப்பு.
எதற்காக இந்த திட்டம்?
இந்திய அரசின் டெலிகாம் நிறுவனமான bsnl வியாபார நோக்கத்தில் மட்டுமின்றி பல ஆண்டுகளாவே சேவை நோக்கில் இந்தியர்களுக்கு சிறந்த சேவையை அளித்து வருகிறது. இந்நிலையில் தமிழக காவல்துறைக்கு உதவி செய்யும் நோக்கிலும் , சமூகத்திற்கு காவல்துறை ஆற்றும் பணியை அங்கீகரிக்கும் விதத்திலும் இந்த சலுகையை அறிவித்துள்ளது. ஏற்கனவே விரைவில் தமிழகத்தில் bsnlன் 4G அறிமுகமாக உள்ள நிலையில் இந்த ஒரு வருட திட்டம் உதவியாக இருக்கும்.
எப்படி கிடைக்கும்?
BSNL இன் வலைதளத்தில் தமிழ்நாடு பகுதியில் சென்று பார்த்தால் இந்த சிறப்பு சலுகையை பெற்று கொள்ளலாம். இது இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு பொருந்தாது.
– சுபாஷ் சந்திரபோஸ்