Doctor Vikatan: பித்தப்பை கற்கள் ஏற்பட என்ன காரணம்? பித்தப்பையை அகற்றுவது மட்டும்தான் இதற்குத் தீர்வா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் பி.செந்தில்நாதன்.
கடந்த சில வருடங்களில் அதிக நபர்கள் பித்தப்பை கற்கள் பிரச்னையால் பாதிக்கப்படுவதைப் பார்க்கிறோம். இதற்கான முக்கிய காரணம், மாறிவரும் உணவுப்பழக்கம். குறிப்பாக கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால் பித்தப்பை கற்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.
கொழுப்பு அதிகமுள்ள மட்டன் போன்ற அசைவ உணவுகள், பீட்ஸா, பர்கர் போன்ற துரித உணவுகள், எண்ணெய், நெய் அதிகம் சேர்த்துச் சமைத்த உணவுகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவோருக்கு பித்தப்பையில் கற்கள் உருவாகலாம்.
சரியான நேரத்துக்குச் சாப்பிடாதவர்களுக்கும் பித்தப்பை கற்கள் உருவாகலாம். சரியான நேரத்துக்குச் சாப்பிடும்போது, பித்தப்பையில் உள்ள பித்தநீர், தானாகவே சுருங்கி, குடலுக்குள் தள்ளப்படும். சரியான நேரத்துக்குச் சாப்பிடாதபோது பித்தப்பையிலேயே அந்த நீர் தங்கி, சுண்டி, மண்ணாகி, பிறகு கல்லாக மாறிவிடும்.
கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுக்கும்போதும், பித்தநீருடன் கொழுப்பு சேர்ந்து, அது அப்படியே படிந்து கல்லாக மாறுகிறது. இந்த இரண்டு விஷயங்களும்தான் பித்தப்பையில் கற்கள் உருவாக பிரதான காரணங்கள். இவை தவிர வேறு காரணங்களும் உண்டு.
பித்தப்பை கற்கள் பாதிப்புக்கு மருந்துகள் பெரிதாக வேலை செய்யாது. ஒருவாரம், பத்து நாள்கள் உடல்நலமின்றி இருந்து, சரியாகச் சாப்பிடாமலிருந்து சகதி (sludge) போன்ற நிலையில் இருக்கும்போது மருந்துகள் ஓரளவு வேலை செய்யும். அதுவே கல்லாக இறுகும்போது எந்த மருந்துகளும் பொதுவாக வேலை செய்வதில்லை. எனவே லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சையின் மூலம் பித்தப்பை கற்களையும் பித்தப்பையையும் சேர்த்து அகற்ற வேண்டியிருக்கும்.
பித்தப்பையிலுள்ள கற்களை மட்டும் எடுத்தால் போதாதா…. பித்தப்பையையும் சேர்த்துதான் அகற்ற வேண்டுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. சிறுநீரகக் கற்கள் உருவாகும்போது, அந்தக் கற்களை மட்டும்தான் நீக்குவார்கள். அதே போல பித்தநாளக் கற்களிலும் கற்களை மட்டும்தான் நீக்குவோம். அப்படியிருக்கும்போது பித்தப்பை கற்களுக்கு மட்டும் ஏன் ஓர் உறுப்பையும் சேர்த்து நீக்க வேண்டும் என்கிறீர்கள், அந்த உறுப்பைக் காப்பாற்ற முடியாதா என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
துரதிர்ஷ்டவசமாக பித்தப்பை கற்கள் பாதிப்பில் கற்களோடு, பித்தப்பையையும் சேர்த்துதான் நீக்க வேண்டிய சூழல் இருக்கிறது. மேற்குறிப்பிட்ட முறையற்ற உணவுப்பழக்கங்களின் காரணமாக பித்தப்பையின் செயல்திறன் இழக்கப்படுவதால்தான் பித்தப்பை கற்களே உருவாகின்றன. எனவே பித்தப்பையிலும் பிரச்னைகள் இருக்கும். அதாவது பித்தப்பை சுருங்கிவிரியும் தன்மையை இழப்பதால்தான் பித்தப்பை கற்கள் உருவாகின்றன. எனவே பித்தப்பை கற்களோடு பித்தப்பையையும் சேர்த்தே அகற்ற வேண்டியிருக்கிறது. பித்தப்பையை நீக்காமல் விடுவது ஆபத்தில் முடியலாம்.
இப்போதுள்ள நவீன மருத்துவத்தில் லேப்ராஸ்கோப்பி முறையில் மிக எளிதாக இந்தச் சிகிச்சையைச் செய்துவிட முடியும். வயிற்றுவலி, செரிமானக் கோளாறு, பித்தப்பை கற்களால் ஏற்படும் தொற்று, அதனால் ஏற்படக்கூடிய மஞ்சள்காமாலை போன்ற பிரச்னைகள் இருப்போருக்கு எமர்ஜென்சி சிகிச்சையாக இதை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.